வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த பிரதமர் மோடி; அமெரிக்க அதிபருடன் சந்திப்பு


வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த பிரதமர் மோடி; அமெரிக்க அதிபருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 24 Sep 2021 4:25 PM GMT (Updated: 24 Sep 2021 4:25 PM GMT)

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.

வாஷிங்டன்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.
நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார்.

அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இதன்பின்னர், பிரதமர் நரேதந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். 

ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார்.

இதனை தொடர்ந்து, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகாவையும் சந்தித்து பேசினார்.  இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி தனி கார் ஒன்றில் இன்று சென்று சேர்ந்து உள்ளார்.  இரு நாட்டு தேசிய கொடிகளும் காரின் முகப்பில் பறந்து கொண்டிருந்தன.

அவரை வெள்ளை மாளிகை வாசலில் வரவேற்ற அதிகாரிகள் உள்ளே அழைத்து சென்றனர்.  இதன்பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை முன் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் இந்திய கொடியை உயர்த்தி பிடித்தபடி அவரை உற்சாகமுடன் வரவேற்றனர்.




Next Story