தைவானுக்கு சீனா கடும் எச்சரிக்கை


தைவானுக்கு சீனா கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2021 5:15 PM GMT (Updated: 24 Sep 2021 5:15 PM GMT)

24 விமானங்கள் தங்களின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.

1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இந்த நிலையில் ‘சிபிடிபிபி’ என்று அழைக்கப்படும் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கு சீனா கடந்த வாரம் விண்ணப்பித்த நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இணைய தைவான் நேற்று முன்தினம் தனது விண்ணப்பத்தை சமர்பித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், “தைவானுடன் எந்த நாடும் அதிகாரபூர்வமாகப் பரிமாறிக் கொள்வதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் மற்றும் தைவான் பிராந்தியத்தை எந்தவொரு அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் அல்லது அமைப்புகளுடன் இணைப்பதை உறுதியாக எதிர்க்கிறோம்” என கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் தைவானுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக சீனா தனது போர் விமானங்களை தைவான் வான்பரப்புக்குள் அனுப்பி வைத்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட 2 விமானங்கள் உள்பட மொத்தம் 24 விமானங்கள் தங்களின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.


Next Story