இந்தியாவுக்கு வருமாறு ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி


இந்தியாவுக்கு வருமாறு ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Sep 2021 11:27 PM GMT (Updated: 24 Sep 2021 11:27 PM GMT)

ஜோ பைடனிடம் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், முதல்முறையாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதன் பின்னர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு உச்சி மாநாடு நிறைவு பெற்றுள்ளது.

இதன் பின்னர் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“குவாட் உச்சி மாநாட்டின் போது, கொரோனா தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான ஒரு பொதுவான சர்வதேச பயண நெறிமுறையை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இது அனைத்து குவாட் தலைவர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், குறிப்பாக ஆப்கானிஸ்தான் பிரச்சினையில், இந்தியாவின் நிலைப்பாடு கூட்டமைப்பில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டார்.

குவாட் கூட்டமைப்பினரின் வேண்டுகோளின் பேரில், இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் மூலம் 8 மில்லியன் டோஸ் ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, வரும் அக்டோபர் இறுதிக்குள் தயாராக இருக்கும் என்றும் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான இந்தியாவின் முடிவுக்கு இணக்கமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் முனைவோர் அமெரிக்கா செல்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் எச்1-பி விசா பெறுவதற்கான சிக்கலை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும் பிரதமர் மோடி, ஜோ பைடன் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத அணுகுமுறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஜோ பைடன், அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியின் வருகையை நாங்கள் விரைவில் எதிர்பார்க்கிறோம்.”

இவ்வாறு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். 

குவாட் உச்சி மாநாட்டிற்குப் பிறகு நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை ஐ.நா. பொது சபையின் 76 வது அமர்வில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story