பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த இஸ்ரேல்


பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த இஸ்ரேல்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:24 PM GMT (Updated: 23 Oct 2021 11:24 PM GMT)

6 பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகளை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளை பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், மேற்குகரை மற்றும் காசா முனையின் ஒருசில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. 

மேலும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தகவல்களை காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகள் வெளியுலகத்திற்கு கொண்டு வருகிறது. 

இந்நிலையில், காசா முனை மற்றும் மேற்குக்கரையில் செயல்பட்டு வரும் 6 பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது. 

மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் இந்த 6 அமைப்புகளும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து நிதியை பெற்று அவற்றை தங்கள் நாட்டுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக, 'பாப்புலர் ப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன்’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு இந்த அமைப்புகள் நிதியுதவி வழங்குவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த 6 பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்புகளும் பயங்கரவாத இயங்கமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த அமைப்புகளின் அலுவலகங்களை சோதனையிடவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அந்த அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களை கைது செய்யவும், அமைப்பிற்கு வரும் நிதியை குற்றமாக்கவும் அதன் மூலம் இந்த அமைப்புகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு சில இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story