அரச பட்டத்தை துறந்து காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி


அரச பட்டத்தை துறந்து காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி
x
தினத்தந்தி 26 Oct 2021 5:22 PM GMT (Updated: 26 Oct 2021 5:22 PM GMT)

ஜப்பான் இளவரசி மகோ தனது அரச பட்டத்தை துறந்து, நீண்ட கால காதலரை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் பாரம்பரிய சடங்குகள் இன்றி மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

கல்லூரி நண்பருடன் காதல் வயப்பட்டார்
ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோ. இவரது மகள் மகோ (வயது 29).ஜப்பான் இளவரசியான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ (29) என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் வயப்பட்டார். 

5 ஆண்டுகளுக்கு பிறகு 2017-ம் ஆண்டில் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.இது ஜப்பான் ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. ஜப்பான் இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞரை மணப்பதை அந்த நாட்டின் பழமைவாதிகள் கடுமையாக விமர்ச்சித்தனர்.

அரச குடும்பத்திலும் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இளவரசி மகோவின் தந்தை புமிகிடோ இதனை மறுத்தார்.ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சாமானிய நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும் என்பது பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கமாகும்.

நிதி பிரச்சினையால் திருமணம் தள்ளி போனது
இந்த முடிவை மனதார ஏற்றார் இளவரசி மகோ. காதலரை கரம் பிடிக்க, தன்னுடைய அரச பட்டத்தை துறக்க தயார் என்றார். அது மட்டும் இன்றி ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவோருக்கு வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) பணத்தையும் பெற மகோ மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அரச குடும்பத்தின் சம்மதத்தோடு 2018-ம் ஆண்டே இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கீ கோமுரோவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சினைகளை எதிர்கொண்டதால் திருமணம் தள்ளி போனது. இதையடுத்து, கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடருவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம்தான் அவர் ஜப்பான் திரும்பினார்.

பாரம்பரிய சடங்குகள் இல்லாமல் திருமணம்
அதனை தொடர்ந்து இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் அக்டோபர் 26-ந் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானிய அரச குடும்பத்தின் பாரம்பரிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி மிகவும் எளிமையான முறையில் இளவரசி மகோ-கீ கோமுரோவின் திருமணம் நடந்தது.

இதன் மூலம் அரச பட்டத்தை துறந்து, பாரம்பரிய சடங்குகளை பின்பற்றாமல் திருமணம் செய்து கொண்ட முதல் அரச குடும்பத்து பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார் இளவரசி மகோ. ஜப்பானிய நேரப்படி காலை 10 மணி அளவில் டோக்கியோவில் உள்ள தனது வீட்டில் இருந்து இளவரசி மகோ தனது திருமணத்தை பதிவு செய்ய புறப்பட்டார். அப்போது வீட்டுக்கு வெளியே அவர் தனது பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ ஆகியோருக்கு பல முறை தலைகுனிந்து வணக்கம் கூறினார். பின்னர் தனது தங்கை ககோவை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். அப்போது அவர் மிகவும் எளிமையாக வெளிர் நீல நிற ஆடையை அணிந்திருந்தார்.

திருமணத்துக்கு எதிராக போராட்டம்

திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர் இளவரசி மகோ-கீ கோமுரோ தம்பதி பத்தரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது மகோ, “எனது திருமணத்தால் மக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மேலும் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்தவர்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, கீ கோமுரோ ஈடுசெய்ய முடியாதவர். திருமணம் எங்களுக்கு அவசியமான தேர்வாக இருந்தது” என கூறினார்.

தொடர்ந்து கீ கோமுரோ பேசுகையில், “நான் மகோவை நேசிக்கிறேன். நமக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே கிடைக்கிறது. அதை நாம் விரும்பும் ஒருவருடன் செலவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

இதனிடையே மகோ-கீ கோமுரோவின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story