பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்வு


பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து  மின்சாரக் கட்டணமும் உயர்வு
x
தினத்தந்தி 6 Nov 2021 10:59 AM GMT (Updated: 6 Nov 2021 10:59 AM GMT)

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் பெட்ரோல், சர்க்கரைக்குப் பிறகு மின்சாரக் கட்டணமும் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்

பணவீக்கத்தின் தாக்குதலையும், அதைத் தொடர்ந்து நிதி நெருக்கடியையும் சந்தித்து வரும் பாகிஸ்தான், தற்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல்,விலை உயர்த்தப்பட்டது. ரூ. 8.03 உயர்வுடன், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 145.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்புக்கு முன் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இமரான்கான் கூறியதாவது:-  

பெட்ரோல் விலை அதிகரித்து விட்டது என்று நீங்கள் கூறினாலும் இதுவும் கூட பாகிஸ்தானில் தான் விலை குறைவு என்று நான் கூறுவேன். விலையை அதிகரிக்க வேண்டும் இல்லை எனில் கடன் அழுத்தம் நம்மை காலி செய்து விடும். 

இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானில் நாம் ரூ.138க்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு நிர்ணயித்துள்ளோம்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி கடுமையாக அதிகரித்து வருகிறது 2021-23 ஆகிய 2 ஆண்டுகளில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இருந்தால் தான் அந்த நாடு கடன்களிலிருந்து வெளியே வர முடியும் என கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த இந்தியாவை உதாரணம் காட்டி மக்களிடம் பேசி உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இந்த நிலையில் பாகிஸ்தானின்  தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (நேப்ரா) மின்சாரத்தின் விலையை திடீர் என உயர்த்தி உள்ளது. நேப்ரா மின் கட்டணத்தை  யூனிட்டுக்கு 1.68  ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை அடிப்படை கட்டணத்தின் கீழ் உள்நாட்டு நுகர்வோருக்குரூ. 1.68 ஆக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் வணிக மற்றும் பிற வகைகளுக்கு, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ. 1.39 ஆக இருக்கும்.

புதிய கட்டணங்கள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.ஆனால், மாதம் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு புதிய கட்டணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டு உள்ளது.

Next Story