மலேசிய ராணுவ விமானம் பயிற்சியின்போது விபத்து - விமானப்படை அதிகாரி உயிரிழப்பு


மலேசிய ராணுவ விமானம் பயிற்சியின்போது விபத்து - விமானப்படை அதிகாரி உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 10:39 PM GMT (Updated: 17 Nov 2021 10:39 PM GMT)

மலேசியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்தார்.

கோலாலம்பூர்,

மலேசியாவின் விமானப்படையான ராயல் மலேசிய விமானப்படைக்கு சொந்தமான ‘ஹவாக் 108’ ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் இரவு தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானப்படை அதிகாரிகள் 2 பேர் இருந்தனர்.

விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணியளவில் சற்றும் எதிர்பாராத வகையில் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் விமானப்படை வீரர்கள் மீட்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் பயணம் செய்த 2 விமானப்படை அதிகாரிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு அதிகாரி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்ட விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மலேசிய ராணுவம், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய அறிக்கை தாக்கல் செய்யும்படி விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story