புதிய வகை கொரோனா பரவல்- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்


புதிய வகை கொரோனா பரவல்- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்
x
தினத்தந்தி 26 Nov 2021 12:39 PM GMT (Updated: 26 Nov 2021 12:39 PM GMT)

கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது.

லண்டன்,

தென் ஆப்பிரிக்காவில்  புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. 

இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறனும் மிக குறைவாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால், உலக நாடுகள் கூடுதல் விழிப்புடன் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தெற்கு  ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

மேலும், கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது. இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story