’ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சுறுத்தல்: எல்லைகளை மூடுகிறது இஸ்ரேல்


’ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சுறுத்தல்: எல்லைகளை  மூடுகிறது இஸ்ரேல்
x
தினத்தந்தி 28 Nov 2021 8:41 AM GMT (Updated: 28 Nov 2021 8:41 AM GMT)

ஒமிக்ரான் வகை கொரோன அச்சுறுத்தல் காரணமாக நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு இஸ்ரேல் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

ஜெருசேலம்,

சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா இன்னும் உலகை விட்டு ஒழியவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரசில் பலவித உருமாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உருமாறிய கொரோனா தொற்றும் மனித இனத்தை தாக்கி வருகின்றன.

இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் தடுப்பூசி பணிகளும் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. போட்ஸ்வானா,  தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் என பல நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. முந்தைய திரிபுகளை விட வீரியம் மிகுந்த வைரசாக கருதப்படும் இந்த தொற்று உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த புதிய வைரசால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலக நாடுகள், பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நாடுகளுக்கு பயணத்தடைகளை விதித்து உள்ளன. மேலும் தடுப்பு நடவடிக்களையும் முடுக்கி விட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில், ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள இஸ்ரேல், முதல் நாடாக வெளிநாட்டு பயணிகள் வர தடை விதித்துள்ளது.  ஒமிக்ரான் கொரோனா பரவலை கண்காணிக்க தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், 14 நாட்கள் வெளிநாட்டு பயணிகளுக்காக எல்லை மூடப்படப்படும்  உத்தரவு  அரசின் அனுமதிக்காக நிலுவையில் உள்ளதாகவும் பிரதமர் நப்தாலி பென்னெட் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு விதிக்கப்படும் 14 நாட்கள் தடைக்காலத்திற்குள், ஒமிக்ரா கொரோனா தடுப்பூசிக்கு எதிராக எந்த அளவுக்கு செயலாற்றும் என்பதில் தெளிவு கிடைத்துவிடும் என இஸ்ரேல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story