அதிக கொரோனா பாதிப்புகளுடன் 2022ம் ஆண்டை தொடங்கிய சீனா


அதிக கொரோனா பாதிப்புகளுடன் 2022ம் ஆண்டை தொடங்கிய சீனா
x
தினத்தந்தி 2 Jan 2022 7:01 PM GMT (Updated: 2022-01-03T00:31:49+05:30)

சீனா அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் 2022ம் ஆண்டை தொடங்கி உள்ளது.


பீஜிங்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது.  இதன்பின்பு பல்வேறு உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவியது.

எனினும், பரவல் தொடங்கியதும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிப்புகளை சீனா கட்டுப்படுத்தியது.  கடந்த ஆண்டிலும் தொற்றை கட்டுக்குள் வைத்திருந்தது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

இதுபற்றி அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 31ந்தேதி 175 பேருக்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  இதனால், கடந்த வாரத்தில் மொத்தம் 1,151 பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.

இதேபோன்று ஷாங்கி மாகாணத்தின் தலைநகரான ஜியான் நகரில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.  கடந்த டிசம்பர் 9ந்தேதியில் இருந்து சனிக்கிழமை வரையில் மொத்தம் 1,451 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இது கடந்த 2021ம் ஆண்டில் சீனாவின் எந்த நகரிலும் இல்லாத மிக அதிக எண்ணிக்கையாகும்.

அந்நகரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராட வேண்டியுள்ளது.  பரவலை கட்டுப்படுத்துவதற்கான திருப்புமுனை எதுவும் இன்னும் ஏற்படவில்லை என அந்நாட்டில் இருந்து வெளிவரும் சீனா டெய்லி என்ற அரசு ஆதரவு பத்திரிகை தெரிவித்து உள்ளது.


Next Story