ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும்..! பிரபல மருந்து நிறுவனம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jan 2022 12:02 AM GMT (Updated: 2022-01-12T05:32:12+05:30)

ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

நியூயார்க், 

பயங்கரவாதத்துக்கு பயந்து நடுங்கிய உலக நாடுகள் எல்லாம் இப்போது ஒமைக்ரான் வைரசுக்கு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன.

இதுவரை உருவான உருமாறிய கொரோனா வைரஸ்களில் அதிக ஆபத்தானதாக ஒமைக்ரான் வைரஸ் கருதப்படுகிறது. பிற எந்த உருமாறிய வைரஸ்களை விடவும் இது அதிகளவிலான உருமாற்றங்களை அதன் ஸ்பைக் புரதத்தில் கொண்டிருப்பதால் அதிவேகமாக பரவும், தற்போதைய தடுப்பூசிகளுக்கு தப்பிவிடும் இயல்பும் இருக்கக்கூடும் என்று ஆரம்பத்திலேயே மருத்துவ விஞ்ஞானிகள் கூறினர்.

இதனால் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக எப்போது தடுப்பூசி வரும் என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக மாறி உள்ளது. இதற்கு பதில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான பைசரிடம் இருந்து வந்திருக்கிறது. இதையொட்டி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறியதாவது:-

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிரான எங்களது தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களின் தீவிர ஆர்வம் காரணமாக இந்த தடுப்பூசி டோஸ்களை எங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யத்தொடங்கி விட்டது. இது தற்போதுள்ள பிற உருமாறிய வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும். இது நமக்கு தேவையா என்பது எனக்கு தெரியவில்லை. இது எப்படி பயன்படுத்தப்படும் என்பதும் எனக்கு தெரியவில்லை.

தற்போது கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள், ஒரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இவை ஒமைக்ரானுக்கு எதிராக நியாயமான பாதுகாப்பை வழங்கி உள்ளன.ஆனால் ஒமைக்ரான் வைரஸ் மீது நேரடியாக கவனம் செலுத்தும் ஒரு தடுப்பூசியானது, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் பாதிக்கிற, அதிவேகமாக பரவுகிற ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்” என்று அவர் கூறினார்.

மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் கடந்த திங்கட்கிழமை அளித்த ஒரு பேட்டியில், தங்களது நிறுவனம் ஒமைக்ரான் மற்றும் இனி வரும் உருமாறிய வைரஸ்களுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கி வருவதாக தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story