ஸ்காட்லாந்தில் கொரோனா தொற்றால் பிரசவத்தின்போது குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்


ஸ்காட்லாந்தில் கொரோனா தொற்றால் பிரசவத்தின்போது குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2022 6:53 AM GMT (Updated: 2022-01-23T12:23:04+05:30)

ஸ்காட்லாந்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எடின்பர்க்,


ஸ்காட்லாந்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து பொது சுகாதார துறையுடன்  வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து, கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தினர். 

அந்த ஆய்வில், ஸ்காட்லாந்தில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதில் இருந்து மொத்தம் 4 ஆயிரத்து 950 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 77 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் பிரசவத்தின்போது குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 23 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதேபோன்று தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளில் 17 சதவீதத்தினர் பிரசவ காலத்திற்கு முன்னதாகவே பிரசவித்துள்ளனர். இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்பட்ட பெண்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், கர்ப்பிணி பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலமாக கொரோனாவிற்கு பிந்தைய பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி பெற்ற கர்ப்பிணிகளின் பிரசவத்தின்போது குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 4 ஆகவும், குறைமாத பிறப்பு விகிதம் 8 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது கர்ப்ப காலத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.


Next Story