கேமரூன் நாட்டில் கால்பந்து மைதானத்துக்குள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!


கேமரூன் நாட்டில் கால்பந்து மைதானத்துக்குள் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி!
x
தினத்தந்தி 25 Jan 2022 5:03 AM GMT (Updated: 2022-01-25T10:33:19+05:30)

சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளே செல்வதற்காக முயன்றனர். ஆனால் மைதான காவலாளிகள் கதவை மூட முற்பட்டனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

யாவொண்டே,

கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை பார்வையிட மைதானத்துக்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் யாவொண்டேவில் உள்ள ஒலெம்பே கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆப்பிரிக்கா கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் கேமரூன்-கொமொரோஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கு இடையேயான  நாக்அவுட் சுற்று கால்பந்து போட்டியை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மைதானத்துக்குள் செல்ல முயன்றதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

அந்த மைதானத்தில் 60 ஆயிரம் பேர் வரை இருந்து பார்வையிடலாம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக  80 சதவீதம் பேர் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளே செல்வதற்காக முயன்றனர். ஆனால், ஆர்வமிகுதியில் போட்டியை காண அளவுக்கதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்ததால் மைதான காவலாளிகள் கதவை மூட முற்பட்டனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே திட்டமிட்டபடி கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வெற்றி பெற்றது.அடுத்து நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் கேம்பியா அணியை கேமரூன் அணி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story