குடியரசு தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து...!


குடியரசு தினம்: இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து...!
x
தினத்தந்தி 26 Jan 2022 8:51 AM GMT (Updated: 2022-01-26T14:21:54+05:30)

நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படைகளின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசியக் கொடி ஏற்றிய பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பேசியதாவது:-

இந்தியா-அமெரிக்கா கூட்டணி,  ஜனநாயக மதிப்பீடுகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது. குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம். 
 
கடந்த செப்டம்பரில் இந்தியப் பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்குச் வந்தபோது  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜோபிடன் கூறினார். அது முழு உலகிற்கும் பயனளிக்கும் என்றும் பிடன் குறிப்பிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story