"நாடு தான் முக்கியம்" பிரான்ஸ் அதிபரின் கோரிக்கையை நிராகரித்த ரஷிய செய்தி ஊழியர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 March 2022 5:49 AM GMT (Updated: 18 March 2022 5:49 AM GMT)

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் உதவியை மரினா ஓவ்சியனிகோவா நிராகரித்துவிட்டார்.

மாஸ்கோ,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 21-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. 

இந்த நிலையில் ரஷியாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது  " போரை நிறுத்துங்கள் என்ற முழக்கத்தோடு கையில் பதாகையை ஏந்தி கொண்டு அங்கே வேலை செய்யும் மற்றொரு பெண் ஊழியர் (மரினா ஓவ்சியனிகோவா) உள்ளே நுழைந்தார்.

ஆங்கிலம் மற்றும்  ரஷிய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .அதில்,"போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் " என எழுதப்பட்டு இருந்தது. 

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் இராணுவத்தை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதாகவும் ரஷ்ய இராணுவத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் மெரினா ஓவ்சியனிகோவாவை ரஷிய போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அபராத தொகையை செலுத்திவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் அவர் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உதவ முன்வந்தார் .இந்த உதவியை மரினா ஓவ்சியனிகோவா மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு  மாஸ்கோவில் இருந்து பேசிய மரினா கூறுகையில், "இந்த போர் அணு ஆயுத போராக மாறாமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனது இந்த செயலால் என் மகன் வருத்தமடைந்துள்ளான். ஆனால் நான் ஏன் இதை செய்தேன் என்பதை என் மகன் வளர்ந்தபின் புரிந்துகொள்வான் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.

இதன் பிறகு ஜெர்மனியை சேர்ந்த பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், "நான் எனது நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. நான் தேசபக்தி உடையவள்.நான் எந்த வகையிலும் என் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை " என தெரிவித்துள்ளார்.

Next Story