பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா: வன்முறை வெடித்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்


பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா: வன்முறை வெடித்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 10 May 2022 12:00 AM GMT (Updated: 10 May 2022 12:00 AM GMT)

இலங்கையில் போராட்டம் நீடிப்பதால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். வன்முறை வெடித்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொழும்பு,

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் இல்லை

அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்தது, அளவுக்கு மீறிய கடன்கள், கொரோனா பெருந்தொற்று ஆகியவை இலங்கையை பெரும் நெருக்கடிக்கு தள்ளிவிட்டன. அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் கிடைக்காமலும், பெட்ரோல்-டீசல் வாங்க முடியாமலும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். கிடைக்கும் பொருட்களும் கைக்கு எட்டாத விலையில் விற்கப்படுவதால் ஏழை, நடுத்தர மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டு விட்டனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை சூனியமாகி விட்டது.

நிலக்கரி, டீசல் போன்ற எரிபொருட்கள் கிடைக்காததால் மின் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் நாடு முழுவதும் 12 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு அமலில் உள்ளது.

பதவி விலக கோரிக்கை

இந்த நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா போன்ற நாடுகள் உதவி வருகின்றன. அத்துடன் சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளும் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன.

ஆனாலும் இலங்கையின் மிகப்பெரிய இடர்பாடுகளை தணிக்க இவை போதவில்லை. எனவே அந்த நாட்டின் சிக்கலுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

பல மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி, இலங்கையின் அரசியலிலும் எதிரொலித்தது. இந்த இடர்பாட்டில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாத அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின.

அத்துடன் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து கூட்டணியை விட்டு விலகின.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்காத ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்பதே அந்த கட்சிகளின் கோரிக் கையாக இருந்து வருகிறது.

போராட்டத்தில் குதித்த மக்கள்

ஆனால் நாடு சந்தித்து வரும் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை என கூறி பொறுப்பை தட்டிக்கழித்த ராஜபக்சே சகோதரர்கள், பதவி விலகப்போவதில்லை என கூறி ஆட்சிக்கட்டிலை வலிமையாக பற்றிக்கொண்டனர்.

அவர்களின் இந்த பிடிவாதமும், தங்களின் வாழும் சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வந்ததும் இலங்கை மக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசும், ராஜபக்சே சகோதரர்களும் பதவி விலகக்கோரி அவர்கள் தன்னெழுச்சியாகவே போராட்டங்களை தொடங்கினர்.

குறிப்பாக தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே கூடாரம் அமைத்து போராட்ட கிராமமாக உருவாக்கியுள்ள அவர்கள், நாளுக்கு நாள் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.

இலங்கையின் பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தன.

இதைப்போல பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபை முழுமையாக பதவி விலகி, அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என இலங்கையின் அதிகாரம் மிக்க புத்தமத தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

நெருக்கடி நிலை பிரகடனம்

இதனால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை. இடைக்கால அரசு தனது தலைமையில்தான் அமைய வேண்டும் என மகிந்த ராஜபக்சே அறிவித்தார்.

மறுபுறம், இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் பிரகடனம் செய்தார். கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்ததை தொடர்ந்து, அன்று இரவிலேயே இந்த அவசர நிலை அமலுக்கு வந்தது.

அதேநேரம் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தனது சகோதரரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவை பதவி விலகுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவுறுத்தினார். கடந்த 6-ந் தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தின்போது இதை வலியுறுத்தினார்.

அத்துடன் புதிய பிரதமர் தலைமையில் இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா

இந்த சூழலில் இலங்கை அரசியலில் நேற்று புதிய திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என தொடர்ந்து கூறி வந்த மகிந்த ராஜபக்சே நேற்று பதவி விலக முன்வந்தார். இதை தனது வீட்டில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் அறிவித்தார்.

அவர் கூறுகையில், ‘நான் அதிகமான போராட்டங்களை பார்த்து பழகிவிட்டேன், எதுவும் என்னை தடுக்காது. எந்த சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நான் அனுபவசாலிதான். எனினும் இலங்கை மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

பின்னர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அதிபரும், தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதன் மூலம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் நீடித்து வந்த போராட்டத்துக்கு அவர் அடிபணிந்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் அனுராதபுரத்தில் மத வழிபாட்டுத்தலம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது அங்கு ஏராளமான பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு ராஜினாமா செய்யுமாறு கோஷங்கள் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து 2 மந்திரிகளும் பதவி விலகினர்.

வன்முறை வெடித்தது

இதற்கிடையே மகிந்த ராஜபக்சே பதவி விலக முடிவு செய்திருப்பதாக நேற்று காலையில் தகவல் வெளியாகி இருந்தது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர்களின் இந்த கொந்தளிப்பு, ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திரும்பியது. இதனால் நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடந்தது.

கொழும்புவில் பிரதமர் வீட்டுக்கு எதிரே உள்ள போராட்ட பந்தல் மற்றும் காலி முகத்திடல் போராட்ட கிராமம் ஆகியவற்றில் ராஜபக்சே ஆதரவாளர்கள் கும்பலாக புகுந்தனர். அவர்கள் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களுக்கு தீ வைத்தும், பிடுங்கி எறிந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

அத்துடன் அங்கு குவிந்திருந்த போராட்டக்காரர்கள் மீது கம்பு மற்றும் தடிகளால் பயங்கரமாக தாக்கினர். உடனே போராட்டக்காரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர்.

இரு பிரிவினருக்கு இடையே நடந்த இந்த மோதலால் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த பயங்கர வன்முறையில் 23 பேர் காயம் அடைந்தனர்.

சஜித் பிரேமதாசா மீது தாக்குதல்

இந்த சம்பவம் குறித்துதகவல் அறிந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு சென்றார். அவரைப்பார்த்ததும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஆத்திரத்துடன் அவர்களை தாக்கினர். அவர்கள் சென்ற காரும் தாக்குதலுக்கு உள்ளானது. எனவே அவர்கள் திரும்பி சென்றனர்.

இந்த மோதலால் அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் வன்முறையாளர்களை விரட்டியடித்தனர்.

போலீசாருக்கு துணையாக ராணுவமும் வரவழைக்கப்பட்டது. அவர்களும் போலீசாருடன் இணைந்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். எனினும் சம்பவ இடத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதைப்போல நாட்டின் பல பகுதிகளில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதில் சுமார் 130 பேர் காயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ராணுவமும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன..

மக்கள் அமைதி காக்குமாறு கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

புதிய பிரதமர் யார்?

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதை தொடர்ந்து இலங்கை அரசியலில் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அரசு வட்டாரங்களில் பலமாக ஒலித்து வருகிறது.

அதேநேரம் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த பரிந்துரைக்கு ஆளுங்கட்சி ஒப்புதல் அளித்து விட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story