நான் கொல்லப்பட்டால்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேச்சு


நான் கொல்லப்பட்டால்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 16 May 2022 9:20 AM GMT (Updated: 16 May 2022 9:20 AM GMT)

என்னை கொன்று விட்டால் எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.





லாகூர்,



பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியே காரணம் என்று எதிர்கட்சிகள் ஒன்று கூடி குற்றம் சாட்டி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.  அதன்மீது நடந்த வாக்கெடுப்பின் முடிவில் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.  இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன், தனக்கு எதிராக அந்நிய நாட்டு சதி உள்ளது என தொடர்ந்து கூறினார்.

அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கட்சி சார்பில் பல பொது கூட்டங்களை நடத்தி வருகிறார்.  அதில், வெளிநாட்டு சதி பற்றி விசாரணை நடத்த வேண்டும், விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.  அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, பாகிஸ்தானின் வரலாறு பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

அதனால், நான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன்.  அதிகாரபலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதி துறை ஒன்றும் செய்து விட முடியாது.  அதனால், மக்களுக்கே அதனை விட்டு விடுகிறேன்.  எனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தரவேண்டும்.  நீங்கள் அதனை செய்வீர்களா? என அவர் கேட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, நீங்கள் எனக்கு இரண்டு உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.  எனக்கு ஏதேனும் நடந்து விட்டால், பின்னர் வீடியோவில் நான் குறிப்பிட்டுள்ள பெயரை கொண்ட நபர்களுக்கு எதிராக நீங்கள் போராடி, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விட்டோம் என உறுதி செய்ய வேண்டும்.  இதனால், அதிகாரபலம் மிக்கவர்கள் முதன்முறையாக சட்டத்தின் முன் நிற்பார்கள் என கூறியுள்ளார்.

அமெரிக்க சதியால் தனது அரசு கவிழ்க்கப்பட்டது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிற இம்ரான் கான், விலைவாசி உயர்வையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  அவர் பேசும்போது, இன்று தக்காளி மற்றும் சிக்கன் என்ன விலையில் இருக்கிறது?

இதுபற்றி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மக்களிடம் சென்று விலைவாசி உயர்வை பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? சிக்கன் விலை இரட்டிப்படைந்து விட்டது.  ஏனெனில், ஹம்சா ஷெபாஸ் அந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என கான் கூறியுள்ளார்.

இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது.  பைசலாபாத் தவிர்த்து சியால்கோட் நகரில் நடந்த மற்றொரு பேரணியில் பேசிய இம்ரான் கான், தன்னை கொல்ல வெளிநாட்டில் சதி நடக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார்.

இதன்பின்னர் டுவிட்டரில் இம்ரான் கான் வெளியிட்ட ஒரு பதிவில், இறக்குமதி செய்யப்பட்ட அரசு என பிரதமர் ஷெபாஸ் தலைமையிலான கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.


Next Story