மரியுபோல் உருக்காலையில் இருந்து உக்ரைன் வீரர்கள் வெளியேற்றம்; சரண் அடைந்தார்களா?


மரியுபோல் உருக்காலையில் இருந்து உக்ரைன் வீரர்கள் வெளியேற்றம்; சரண் அடைந்தார்களா?
x

மரியுபோல் உருக்காலையில் இருந்து உக்ரைன் படை வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சரண் அடைந்தார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மரியுபோல் மீது ரஷியா கண்

உக்ரைன் மீதான போரில் மரியுபோல் நகரத்தின் மீது போர் தொடங்கிய நாள் முதல் ரஷியா கண் வைத்திருந்தது. இந்த நகரத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தியது. அந்த நகரத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி உருக்குலைந்து போக வைத்தது. அந்த நகரின் கோட்டை போல அமைந்திருந்த அஜோவ் உருக்காலை தவிர்த்து எஞ்சிய பகுதிகளை பிடித்து அந்த நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

பூகோள அடிப்படையில் மரியுபோல், ரஷியாவால் 2014-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கிரீமியாவுக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டான்பாஸ் பகுதிக்கும் இடையே பாலம் போல இந்த நகரம் அமைந்துள்ளது. இதைக் கைப்பற்றுகிறபோது அந்த பிராந்தியமே ரஷியாவின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுகிறது.

அஜோவ் உருக்காலையை தொடர்ந்து தக்கவைக்க உக்ரைன் படைகள் போராடின. அந்த ஆலையின் மீது தொடர்ந்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில் அந்த ஆலைக்குள் சுரங்கங்களில் இருந்த வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையிலும் அந்த ஆலையை காத்து வந்தனர். அவர்கள் உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் தீரும் வரை போராடுவார்கள் என கூறப்பட்டது.

வீரர்கள் வெளியேற்றம்

இந்த நிலையில் அங்கிருந்த வீரர்கள் 260-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ளவர்களை வெளியேற்ற நேற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெளியேற்றப்பட்ட வீரர்கள் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 2 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 211 பேர் ஒலெனிவ்கா நகருக்கும், காயம் அடைந்துள்ள 53 பேர் நோவோசோவ்ஸ்கிற்கும் கொண்டு செல்லப்பட்டனர் என ஊடக தகவல்கள் கூறுகின்றன.

போர்க்குற்றவாளிகளா, கைதிகளா?

இவர்கள் அனைவரும் சர்வதேச சட்டத்தின் கீழ் நடத்தப்படுவார்கள் என்று ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. ஆனால் அவர்களின் நிலை குறித்து அந்த மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எதுவும் கூற மறுத்துவிட்டார். உக்ரைன் வீரர்கள் போர்க்குற்றவாளிகளாக நடத்தப்படுவார்களா, போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்களா என்ற கேள்விக்கு அவர் பதில் தரவில்லை.

ரஷிய நாடாளுமன்றத்தில் இதுபற்றி சபாநாயகர் வியாசஸ்லாவ் வொலோடின் கூறும்போது, “வெளியேற்றப்பட்டவர்கள் பரிமாற்றத்துக்கு உட்பட்டவர்களாக இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். ஆனால் வீரர்கள் வெளியேற்றம், வீரர்கள் பரிமாற்றத்துக்கான ஒரு பகுதிதான் என்று பொருள்படும் வகையில் பி.பி.சி. தகவல் வெளியிட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா கூறுகிறது.

உக்ரைன் சொல்வது என்ன?

ஆனால் உக்ரைன் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக உக்ரைன் படை வீரர்களின் ‘காரிசன்’ (ஆலையை பாதுகாப்பதற்கான பணி) முடிந்து விட்டது என கூறியது.

இதனால் உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்தார்களா என்பதில் குழப்பம் உள்ளது. இதுபற்றி உக்ரைன் படைத்தலைவர் கூறுகையில், “மரியுபோல் போர் பணி நிறைவேறி உள்ளது. அஜோவ் உருக்காலையில் நிறுத்தப்பட்டுள்ள பிரிவுகளின் தளபதிகளுக்கு அவர்களது வீரர்களின் உயிரைக்காப்பாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அந்த ஆலையை ரஷியா முற்றிலுமாய் பிடித்திருப்பது, இந்த போரில் ஒரு முக்கிய மைல் கல்லாகிறது.

வீரர்கள் வெளியேற்றம் பற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைன் ஹீரோக்கள் உயிருடன் இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை. அவர்களில் பலரும் படுகாயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை எங்கள் பகுதிக்கு அழைத்துவர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு தந்திரமும், காலமும் தேவைப்படுகிறது” என தெரிவித்தார்.

செர்னிஹிவ் மீது தாக்குதல்

இதற்கிடையே உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே உள்ள டெஸ்னா என்ற கிராமத்தின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மார்ச் 2-ந் தேதி முதல் இதுவரையில் உக்ரைனுக்கு 20 ஆயிரம் டன் உணவு பொருட்கள், அத்யாவசிய பொருட்கள், மருந்துகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விரையும் வாடிகன் மந்திரி

உக்ரைன் மீதான தங்கள் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிரதிநிதியாக வெளியுறவு மந்திரி ஆர்ச் பிஷப் பால் கல்லாகர், இன்று (புதன்கிழமை) உக்ரைன் செல்கிறார்.

அவர் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுவார் என வாடிகன் தகவல்கள் கூறுகின்றன.


Next Story