பிலிப்பைன்சில் கிளர்ச்சியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு


பிலிப்பைன்சில் கிளர்ச்சியாளர்கள் 7 பேர் உயிரிழப்பு
x

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களாக கருதப்படுபவர்கள் தங்கள் இனத்திற்கென தனி நாடு அறிவிக்கக்கோரி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் பாங்கமோரோ என்னும் இயக்கத்தை நிறுவி நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். இதனை பிலிப்பைன்ஸ் அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மகுயிண்டனாவோ டேல் சூர் மாகாணத்தில் உள்ள டத்து பக்லாஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பாங்கமோரோ இயக்கம் செயல்படுகிறது. இந்தநிலையில் அங்கு பதுங்கி இருக்கும் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அதன்படி ராணுவம் அங்கு சென்று கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில் 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நவீன ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிடவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்ததாக ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் கூறினர்.


Next Story