மோடி எடுக்கும் கடினமான முடிவு ஆச்சரியப்பட வைத்தது- புதின் பாராட்டு


மோடி எடுக்கும் கடினமான முடிவு ஆச்சரியப்பட வைத்தது- புதின் பாராட்டு
x
தினத்தந்தி 8 Dec 2023 9:38 AM GMT (Updated: 8 Dec 2023 10:42 AM GMT)

இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவுடன் பதிவிட்டுள்ள கருத்தும் இந்தியில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதினின் குரல் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் புதின் கூறியிருப்பதாவது:-

இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி அல்லது மிரட்டி எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டபோது ரஷியா பெயரை குறிப்பிடாமல் பிரகடனம் தயாரிக்கப்பட்டு அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்தார். கடந்த மாதம் காணொலி வாயிலாக நடந்த ஜி20 கூட்டத்தில் பேசிய புதின், ஜி20 தலைமை பதவியில் இருந்தபோது இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாக கூறி நன்றி தெரிவித்தார்.


Next Story