அரசியலில் இருந்து விலகல் முடிவு; மதகுருவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் 20 பேர் உயிரிழப்பு


அரசியலில் இருந்து விலகல் முடிவு; மதகுருவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் 20 பேர் உயிரிழப்பு
x

அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்த மதகுருவின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது.



பாக்தாத்,



ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிமெண்ட்டால் ஆன தடுப்புகளை அடித்து, உடைத்தனர். தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். மக்களில் 300 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதற்கிடையே, போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என கூறி, அதுவரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என மதகுரு அறிவித்து உள்ளார்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில், உடனடியாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதுபற்றி ஐ.நா.வின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில், இந்த பதற்ற சூழ்நிலையை தணிக்கவும் மற்றும் வன்முறை பரவி விடாமல் தவிர்ப்பதற்கும் வேண்டிய நடவடிக்கைகளை தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Related Tags :
Next Story