துருக்கியில் அதிகாலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு


துருக்கியில் அதிகாலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
x

துருக்கியில் அப்சின் நகரில் இன்று அதிகாலையில் ரிக்டரில் 4.0 என்ற அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

அப்சின்,

துருக்கி நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கி.மீ. தென்மேற்கே இன்று அதிகாலையில் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

தொடர்ந்து ரிக்டரில் 7.5 அளவிலான மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் சிக்கி இரு நாடுகளிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிக்கி பாதிப்படைந்தனர்.


Next Story