இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 4 Dec 2022 10:45 PM GMT (Updated: 4 Dec 2022 10:45 PM GMT)

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெஹ்ரான்,

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது.

ஈரானை தனது மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல் அந்த நாடு அணு ஆயுதங்கள் பெறுவதை தடுக்க போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என கூறி வருகிறது.

அதே வேளையில் எந்தவொரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து வருகிறது.

இப்படி இருநாடுகளுக்கும் இடையே தீராப்பகை நிலவி வரும் நிலையில் ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் என்கிற புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகிய 4 பேரை ஈரானின் புரட்சிகர போலீஸ் படை சமீபத்தில் கைது செய்தது.

இஸ்ரேல் உளவாளிகளான அந்த 4 பேரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாகவும் புரட்சிகர போலீஸ் படை தெரிவித்தது.

மேலும் அவர்கள் தனியார் மற்றும் பொது சொத்துகளை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து அந்த 4 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 4 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதே சமயம் எங்கு, எப்படி அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.


Next Story