நேபாள விமான விபத்து: விமானியின் போன் சிக்னல் மூலம் விமானம் விழுந்த இடம் தெரிய வாய்ப்பு உள்ளதாக தகவல்!


நேபாள விமான விபத்து: விமானியின் போன் சிக்னல் மூலம் விமானம் விழுந்த இடம் தெரிய வாய்ப்பு உள்ளதாக தகவல்!
x

விமானம் இருக்கும் இடம் குறித்த முக்கிய தடயங்களை, விமானியின் மொபைல் போன் சிக்னல் வழங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் இன்று காலை 9.55 மணிக்கு நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமாகியது.

விபத்துக்குள்ளான ட்வின் ஓட்டர் 9என்-ஏ ஈ டி என்ற விமானத்தில் நான்கு இந்தியர்கள் (மும்பையைச் சேர்ந்தவர்கள்) தவிர, இரண்டு ஜெர்மனியர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் இருந்தனர் என்று விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வான்வழியாகவும், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரைவழி வழியாகவும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

விமானம் இருக்கும் இடம் குறித்த முக்கிய தடயங்களை, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அந்த விமானத்தை இயக்கிய விமானியின் மொபைல் போன் சிக்னல் வழங்கக்கூடும் என்று நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், விமானத்தின் கேப்டன் கிமிரின் செல்போனுக்கு சிக்னல் கிடைத்ததால் அது ஒலித்தது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேபாள தொலைத்தொடர்பு அமைப்பில் இருந்து கேப்டனின் அலைபேசியைக் கண்காணித்த பின்னரே விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலத்தில் இடத்தை கண்டறியும் டிரான்ஸ்மிட்டரை அடிப்படையாகக் கொண்டு, கைபாங் பகுதியில் விமானத்தின் சாத்தியமான இருப்பிடத்தைக் கண்டறிந்ததாகவும் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜோம்சோம் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார். அதாவது, ஜோம்சோமின் காசா பகுதியில், ஒரு பயங்கர சத்தம் கேட்டதாகவும், ஆனால் இதை பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விபத்துக்குள்ளான விமானம் கடைசியாக தவ்லகிரி சிகரத்தை நோக்கி திரும்பியதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திபெத்தின் எல்லையில் உள்ள மாவட்டத்தில், இமயமலை மலையின் அடிவாரத்தில் லியாங்கு கோலா நதி உற்பத்தியாகும் பகுதியில் ஒரு விமானம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி கிராம மக்கள் பார்த்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், மோசமான வானிலை தேடுதல் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்தது. இந்த நிலையில் கோவாங் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரியவிலை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை குறித்து கண்டறியும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக தேடுதல் பணி இன்று முடித்துக் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை காலை மீண்டும் விமானத்தை கண்டறிந்து மீட்கும் பணி தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமானது, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது என 977-9851107021 என்ற அவசர தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் யார் என்பதை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவர்கள் அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், மகன் தனுஷ் திரிபாதி மற்றும் மகள் ரித்திகா திரிபாதி ஆகியோர் ஆவர்.

நேபாள மலை பகுதிகளில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக 'தாரா ஏர்' உள்ளது. கிராமப்புறத்தை மேம்படுத்த உதவும் நோக்கத்துடன் 2009 இல் விமான சேவையை இது தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story