கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி


கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே வடகொரியாவில் புது வகை தொற்று உறுதி
x

கொரோனா தொற்று, நீடித்த உணவு பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இடையே, புதிய வகை பெருந்தொற்றால் வடகொரியா பாதிக்கப்பட்டு உள்ளது.



பியாங்யாங்,



உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. எனினும், வடகொரியாவில் ஈராண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் கடந்த ஏப்ரலில் அந்நாட்டில் இந்த தொற்று பரவ தொடங்கி உள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மே மாதம் 12ந்தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் என்ற வகையிலான தடுப்பூசியை அந்நாட்டில் யாரும் போட்டு கொள்ளாத சூழலிலும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் பிற நாடுகளில் இருந்து வடகொரியா தனித்து விடப்பட்டது.

கொரோனா பரிசோதனைக்கான உபகரணங்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை ஆகியவற்றால் கொரோனா பாதிப்பு பற்றி முழுமையாக அறியப்பட முடியவில்லை. இதனால், காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியப்படுகின்றன.

இந்த சூழலில், வடகொரியாவில் காய்ச்சல் அறிகுறிகள் கண்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 26,010 ஆக பதிவாகி உள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன. இதனால், அந்நாட்டில் இதுவரை மொத்த காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 45.6 லட்சம் என்ற அளவில் உள்ளது. மொத்த உயிரிழப்பு 73 ஆக உள்ளது.

இந்த நிலையில், வடகொரியாவின் பண்ணை பகுதியில் புதிதாக ஒரு பெருந்தொற்று பாதிப்பு இன்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தொற்று வயிற்றின் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் அன் மேற்கு பகுதியில் அமைந்த ஹீஜு என்ற துறைமுக நகருக்கு மருந்துகளை அனுப்பி வைத்து உள்ளார். எனினும், எந்த வகையான நோய் என கண்டறியப்படவோ அல்லது தொற்று எண்ணிக்கையோ வெளிவரவில்லை.

இந்த பரவலை உடனடியாக, முழு அளவில் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கிம் ஜாங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்தவும், மருத்துவ மற்றும் அறிவியல் பரிசோதனைகளால் பாதிப்புகளை உறுதிப்படுத்தவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

கொரிய விவகாரங்களை கையாளும் தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அதனை உற்றுநோக்கி வருகிறோம். காலரா அல்லது டைபாய்டு வியாதியாக அது இருக்கலாம். கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அந்நாட்டில் நீர்சார்ந்த வியாதியான டைபாய்டு பரவி இருந்தது என தெரிவித்து உள்ளது.

இது ஒன்றும் வடகொரியாவுக்கு புதிதல்ல என கூறிய தென்கொரியா, ஆனால், கொரோனாவால் போராடி கொண்டிருக்கும்போது அந்நாட்டில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது சிக்கலானது என சியோல் நகர ஹான்யங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷின் யங்-ஜியோன் கூறியுள்ளார்.


Next Story