நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் சம்பளம்; நிறுவனம் அறிவிப்பு


நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் சம்பளம்; நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 May 2022 6:22 AM GMT (Updated: 21 May 2022 6:51 AM GMT)

இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் ஆம்னி என்ற நிறுவனம் தங்களுடைய உற்பத்தியான நாய் உணவை சுவைத்து அதுபற்றிய விவரங்களை தருவதற்கு சம்பளம் தருகிறது. இந்நிறுவனம் தாவர வகையிலான நாய் உணவை தயாரிக்கிறது.

அந்த உணவு பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும்.

இந்த வேலைக்கு, தேர்வு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. எனினும், நாய் உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, 5 நாட்களுக்கு நாய் உணவை சாப்பிட வேண்டும். அதன்பின்னர், அவரது அனுபவம், உணவின் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்றில் உணவின் இயக்கம் உள்ளிட்டவற்றை எப்படி உணர்ந்தீர்கள்? என்பது பற்றிய விவரங்களை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும்போது, ஆம்னி பொருட்கள் தூய்மையானவை. அதில் ரகசிய பொருட்கள் எதுவும் கலக்கப்படவில்லை.

சட்டப்படி அனைத்து நாய் உணவும் மனிதர்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களையே கொண்டிருக்க வேண்டும். ஆனால், சில தயாரிப்புகளில் விலங்குகளின் மலிவான உப பொருட்கள் சேர்க்கப்படும். மனிதர்கள் உண்டு மீதமுள்ள விரும்பத்தகாத உணவுகளும் சேர்க்கப்படுவதுண்டு. இதனை மனிதர்களுக்கு கொடுக்கும்போது நிச்சயம் அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால், ஆம்னி உணவு பொருட்கள் மனிதர்கள் கூட உண்பதற்கு ஏற்றவை. அதனாலேயே, எங்களது தயாரிப்புகளை சுவைத்து பார்ப்பதற்காகவும், அவை எவ்வளவு சுவை வாய்ந்தது மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தாவரம் சார்ந்த உணவு என்று நிரூபிப்பதற்காகவும், நாங்கள் அதற்கான ஆட்களை பணிக்கு அமர்த்துகிறோம்.

இந்த ஆம்னி தயாரிப்புகளை நான் மற்றும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் கூட உண்போம். ஆனால், பிற நாய் உணவு தயாரிப்பு நிர்வாகிகள் பலர் அதனை செய்ய முடியாது என நாங்கள் உறுதி கூறுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story