பெலோசியின் சுற்றுப்பயணம் எதிரொலி; தைவான் மீது வர்த்தக தடைகளை விதித்த சீனா


பெலோசியின் சுற்றுப்பயணம் எதிரொலி; தைவான் மீது வர்த்தக தடைகளை விதித்த சீனா
x

அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் சுற்றுப்பயணம் எதிரொலியாக தைவான் மீது சீனா வர்த்தக தடைகளை விதித்து உள்ளது.



பீஜிங்,



சீனாவில் இருந்து தைவான் பிரிந்த பின்பு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக தைவான் நாடு பார்க்கிறது. ஆனால் சீனாவோ, தைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

தேவைப்பட்டால், தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82), தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானை சேர்த்துக்கொண்டார். அவர் தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்தன. உடனே சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது. நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரித்தது.

இதுபற்றி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவா சுன்யிங் கூறும்போது, சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு நலன்களை பலவீனப்படுத்தினால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளும் வகையில் நான்சி பெலோசியின் தைவான் பயணம் உறுதியானது. இதனால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு உருவானது. அமெரிக்காவின் 13 போர் விமானங்கள், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் இருந்து புறப்பட்டன. இந்த விமானங்கள், நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின்போது, அவரது விமானத்துக்கு பாதுகாப்பாக அணிவகுத்து செல்லும் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நான்சி பெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து அவரது விமானம் (சி-40பி) தைவான் புறப்பட்டது.

நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன. மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன. இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது. இதனால் அடுத்தது என்ன என்ற பரபரப்பு உலக அரங்கில் நிலவுகிறது.

இந்த சூழலில், பெலோசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை அத்துமீறிய தீவிர செயல் என கூறியுள்ள சீனா, தைவான் நாடு மீது வர்த்தக தடைகளை விதித்து உள்ளது. தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை குழித்தோண்டி புதைக்கும் வகையில் இந்த பயணம் அமைந்து உள்ளதுடன், தைவான் சுதந்திரத்திற்கான பிரிவினைவாத சக்திகளுக்கு, ஒரு தீவிர தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது என்றும் சீனா தெரிவித்து உள்ளது.

தைபேயில் சென்று இறங்கிய பின்பு பெலோசி கூறும்போது, தைவானின் ஜனநாயகத்திற்கு ஆதரவு தருவதில் தனது நாடு உறுதியான ஈடுபாட்டுடன் இருக்கிறது என மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். சுயாட்சி செய்யும் தைவான் தீவின் மீது, அமெரிக்கா நீண்ட காலம் கொண்டுள்ள கொள்கையில் தனது பயணம், எந்தவிதத்திலும் முரண்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவை எரிச்சலூட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, தைவானின் பல்வேறு நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் மற்றும் இறக்குமதி தடைகளை சீனா விதித்து உள்ளது.

ரொட்டிகள், வேகவைத்த பொருட்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தைவானின் பல்வேறு உணவு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் இறக்குமதிக்கு சீனா தற்காலிக தடை விதித்து உள்ளது. இதனை தைவான் வேளாண் கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது.

இதன்படி, தேயிலை பொருட்கள், உலர் பழங்கள், தேன், கோக்கோ பீன்ஸ் மற்றும் காய்கறிகள் உள்பட 700 மீன்பிடி படகுகளில் கொண்டுவரப்பட்ட மீன்களையும் கருப்பு பட்டியலில் சீனா சேர்த்து உள்ளது.

இதுபற்றிய சீனாவின் சுங்க இலாகாவின் பொது நிர்வாகத்திற்கான வலைத்தள தகவலின்படி, பல தைவான் நிறுவனங்கள் தங்களது பதிவை புதுப்பித்துள்ளபோதிலும், இந்த தடையால் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது. இதன்படி, பதிவு செய்யப்பட்ட 107 தைவான் நிறுவன பிராண்டுகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன்கீழ், ரொட்டிகள், நூடுல்ஸ் உள்ளிட்டவை வரும். இதேபோன்று, 35 நிறுவனங்கள், தற்போது இறக்குமதிக்கான தற்காலிக சஸ்பெண்டு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story