லண்டனில் மதுபான விடுதியில் புகுந்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் தாக்குதல்!


லண்டனில் மதுபான விடுதியில் புகுந்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் தாக்குதல்!
x

Image Credit:www.metro.co.uk

லண்டனில் நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின.

லண்டன்,

லண்டனில் நேற்று நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. இதை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்களாவர்.

அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள், வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து வாடிக்கையாளர்களைத் தாக்கினர். அவர்கள் இங்கிலாந்து கால்பந்து அணியின் தொப்பிகள் மற்றும் உடைகளை அணிந்திருந்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்கள் ஜெர்மன் ரசிகர்கள் என்று தெரியவந்தது.

ஜெர்மன் கால்பந்து ரசிகர்கள் லண்டன் பப்பில் வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்தவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே கால்பந்து போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் இருந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்தது.


Next Story