ஆன்மிகம்

24. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி + "||" + thriuppavai in anmeegam

24. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி

24. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை அன்றுஇவ் உலகம் அளந்தாய்! அடிபோற்றி சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி வென்று பகை கெடுக்கும்
திருப்பாவை

 அன்றுஇவ் உலகம் அளந்தாய்! அடிபோற்றி
சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய்! திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல்போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


வாமன அவதாரம் எடுத்த போது மூவடியால் உலகை அளந்தவனே! உன் திருவடிகளைப் போற்று கின்றோம். தென்னி லங்கை சென்று அரக்கர் குலத்தை அடியோடு அழித்தவனே! உன் திறன் வாழ்க! சக்கர வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் எட்டி உதைத்து மாய்த்தவனே! உன் புகழ் வாழ்க! கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியால் அடித்துக் கொன்ற உன் திருப்பாதங்களைப் போற்றுகிறோம்.  கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து, பசுக்களைக் காத்தவனே! உன் குணம் வாழ்க! பகைவர்களை வேரோடு ஒழிக்கும் உன் கை வேல் வாழ்க! இவ்வாறு உன் புகழ் பாடி நோன்புக்குரிய வேண்டுதல்களை உன்னிடம் பெற்றுக்கொள்ள வந்துள்ளோம். நீ மனமிரங்கி அருள்புரிய வேண்டும்.

திருப்பள்ளியெழுச்சி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! உன் சன்னிதியில் இனிய இசையை இசைக்கும் வீணையை உடையவரும், யாழினை உடையவரும், ஒரு பக்கம் நிற்கின்றனர். வேதங்களை ஓதுபவர் களும், பல வகையான பாடல்களைப் பாடு வோரும் ஒரு பக்கம் உள்ளனர். மலர் மாலையை கையில் வைத்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு பக்கத்தில் நிற்கின்றனர். கும்பிட்ட கைகளை உடையோரும், ஆனந்த கண்ணீர் வடித்தபடி துவண்டிருப்போரும் ஒரு பக்கம் உள்ளனர். தலைக்கு மேல் இரு கைகள் குவித்துக் கும்பிடுவோர் ஒரு பக்கம் நிற்கின்றனர். என்னையும் ஆட்கொண்டு அருள்புரியும் எம்பெருமானே திருப்படுக்கை தவிர்த்து எழுந்தருள்வாயாக.