28. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


28. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 11 Jan 2017 11:00 PM GMT (Updated: 11 Jan 2017 6:41 PM GMT)

திருப்பாவை கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம்

திருப்பாவை

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.


குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! இடையர் குலத்தில் பிறந்த நாங்கள் பசுக்களின் பின் சென்று காட்டில் உண்டு வாழ்பவர்கள். கள்ளமில்லாத ஆயர் குலத்தில் வந்து நீ பிறந்தாய். இந்தக் குலத்தில் பிறந்து உன்னைப் பிறவியிலேயே தலைவனாகப் பெற்றது எங்கள் புண்ணியமாகும். உனக்கும், எமக்கும் உறவு உண்டென்றால் அது இந்தப் பிறப்போடு முடிந்து விடாது. ஏதும் அறியாத பெண் பிள்ளைகளாகிய நாங்கள் உன் மீது பேரன்பு கொண்டுள்ளோம். அதனால் உன்னைப் பெயர் சொல்லி அழைத்துவிட்டோம். இதற்காக கோபம் கொள்ளாதே. இறைவனே உன் அருளை தந்து அருள்வாய்.

திருப்பள்ளியெழுச்சி

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி
திருப்பெருந் துறைஉறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதும் காட்டிவந்து ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!


உலகம் தோன்றுவதற்கு முந்தைய நிலை, உலகம் தோற்றம் பெற்ற இடைநிலை, உலகம் ஒடுங்கும் முடிவு நிலை ஆகிய மூன்றாகவும் ஆனவனே! மும்மூர்த்திகளே உன் திருவுருவத்தை அறிய முடியாதபோது வேறு யார்தான் உன்னை உணரமுடியும். பந்து போன்ற மென்மையான விரல்களையுடைய அம்மையோடு அடியவர்களின் பழைய குடில்கள்தோறும் எழுந்து காட்சியருளும் கருணை கொண்டவனே! நெருப்பு போன்ற செம்மேனி காட்டி நித்தமும் வாசம் செய்யும் திருப்பெருந்துறைத் திருக்கோவில் காட்டி அடியவரை ஆட்கொள்ள வரும் அந்தண உருவங்காட்டி எங்களை ஆட்கொண்டாய். அருமையான அமுதம் போன்றவனே! நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.

Next Story