பைபிள் மாந்தர்கள் : திருவெளிப்பாட்டுப் பெண்


பைபிள் மாந்தர்கள் : திருவெளிப்பாட்டுப் பெண்
x
தினத்தந்தி 21 Feb 2017 1:38 PM IST (Updated: 21 Feb 2017 1:38 PM IST)
t-max-icont-min-icon

பைபிளின் கடைசியாக வருகின்ற நூல் திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு.

பைபிளின் கடைசியாக வருகின்ற நூல் திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு. இயேசுவின் திருத்தூதர்களில் படுகொலை செய்யப்படாமல் இயற்கை மரணம் எய்திய ஒரே நபர் யோவான் தான். அவருடைய கடைசி காலத்தில் இறைவன் அவருக்கு ஒரு வெளிப்படுத்துதலை வழங்கினார். அந்தக் காட்சியே ‘திருவெளிப்பாடு’ எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையும், உலக முடிவில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளையும் இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலில் ஒரு பெண் காட்சியளிக்கிறார். அவரைப்பற்றி நூல் கவித்துவமாய் விளக்குகிறது.

‘வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்’ என அவருடைய தோற்றம் விளக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் கர்ப்பவதியாய் இருந்தார். பேறுகால வேதனையின் கதறலை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பெண், பிள்ளை பெற்றவுடன் விழுங்கி விட ஒரு அரக்கப் பாம்பு அங்கே தோன்றியது. அந்த பாம்புக்கு ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன.

எல்லா நாடுகளையும் இருப்புக் கோல் கொண்டு நடத்தவிருந்த ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். குழந்தை கடவுளின் அரியணை இருந்த இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பெண் பாலைவனத்தில் கடவுள் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு ஓடிப் போனார்.

அப்போது விண்ணகத்தில் ஒரு போர் வந்தது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தனர். அரக்கப் பாம்பு தோல்வியடைந்து மண்ணில் தள்ளப்பட்டது. அது அந்தப் பெண்ணைக் கொன்றுவிட அவரைத் துரத்தியது.

அந்தப் பெண்ணுக்கு தப்பிச் செல்ல இரண்டு கழுகின் சிறகுகள் அளிக்கப்பட்டன. அவர் பாலை நிலத்துக்கு பறந்து சென்றார். அங்கே மூன்றரை ஆண்டு காலம் பேணப்பட்டார். அப்பெண்ணை நீரினால் மூழ்கடிக்க அரக்கப்பாம்பு வாயிலிருந்து தண்ணீரை ஆறு போல பாயச் செய்தது.

உடனே நிலம் வாயைத் திறந்து அந்த நீரை உறிஞ்சிக் கொண்டது. அதனால் அரக்கப் பாம்பு அந்த பெண்ணை விட்டு விட்டு அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர்தொடுக்கப் புறப்பட்டுப் போனது.

கிறிஸ்தவம் அந்தப் பெண்ணை இரண்டு விதமாகப் பார்க்கிறது. ஒன்று அந்தப் பெண்ணை கிறிஸ்தவர்களின் கூட்டமாகிய திருச்சபையைக் குறிப்பதாகப் பார்க்கிறது. பெண்ணின் தலையில் இருக்கும் பன்னிரண்டு விண்மீன்களும் பன்னிரண்டு திருத்தூதர்களைக் குறிக்கலாம். அல்லது இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கலாம்.

கதிரவன் என்பது திருச்சபையின் மாட்சியைக் குறிக்கிறது. நிலவு என்பது திருச்சபையின் உயர்நிலையைக் குறிக்கிறது. அரக்கப் பாம்பு என்பது சாத்தானையும், அது போரிடச் சென்ற பெண்ணின் மற்ற பிள்ளைகள் என்பது தொடக்க கால கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது.

இஸ்ரவேல் மக்களினத்தில் இருந்தே இயேசு தோன்றினார் என்பதன் உருவகமே அந்தக் குழந்தை என்பது இந்த இறையியல் சிந்தனையின் விளக்கம்.

இன்னொரு விளக்கம், இந்தப் பெண்ணை இயேசுவின் தாய் மரியாவோடு இணைத்துப் பார்க்கிறது. அது ஆதிகாலம் முதல் மரபு வழியாக பேசப்படும் இறையியல். எல்லா நாடுகளையும் ஆளும் குழந்தையாகிய இயேசுவைப் பெற்றெடுத்தவர் அன்னை மரி எனும் நோக்கில் இந்த விளக்கம் அமைகிறது.

அவருக்கு சிறகுகள் அளிக்கப்பட்டதும், அவர் கடவுள் குறிப்பிட்ட இடத்திற்குப் பறந்து சென்றதும் மரியாளின் விண்ணேற்பைக் குறிப்பதாக ஆதிகால மரபுகள் சொல்கின்றன.

அவர் கதிரவனை ஆடையாய் அணிந்து கொண்டிருப்பதும், நிலவைக் காலடியில் வைத்திருப்பதும், பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருப்பதும் அவருடைய விண்ணக மாட்சியைக் குறிப்பதாக அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். வேளாங்கண்ணி உட்பட பல்வேறு மாதா ஆலயங்களில் மாதாவை இப்படி கதிரவன், நிலா, நட்சத்திரங்களின் அலங்காரத்துடன் வடித்திருப்பது இதன் ஒரு வெளிப்பாடு தான்.  

‘உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிக்காலை காயப்படுத்துவாய்’ என பைபிளின் முதல் நூலான தொடக்க நூலில் மரியாளும், சாத்தானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே போல பைபிளின் கடைசி நூலான திருவெளிப்பாட்டிலும் சாத்தானும், பெண்ணும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணும், சாத்தானும் நிரந்தரப் பகைவர்களாக காட்சியளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணில் வலி, திருச்சபை சந்திக்கப்போகும் சவால்களையும், துன்பங்களையும் குறிக்கிறது. அதன் பின் அமைதியான ஆயிரம் ஆண்டு கால இறை ஆட்சி  தொடங்கும் என்கிறது திருவெளிப்பாடு.

விவிலியத்தின் கடைசி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பெண் ஒரு வியப்புக் குறியீடு. தூய ஆவியால் எழுதப்பட்ட, விவிலியத்தின் விளக்கங்களைப் புரிந்து கொள்ள தூய ஆவியின் வெளிப்படுத்துதல் நிச்சயம் தேவை. விவிலிய மனிதர்களைப் பற்றி ஆழமாய் அறியவும், இறை வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளவும் விவிலியத்தை திறந்த மனதோடு படிப்பது மட்டுமே ஒரே வழி.

(நிறைவு பெற்றது)

Next Story