ஆன்மிகம்

69. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு + "||" + The heaven is a protected roof

69. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

69. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு
‘‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்.
அறிவோம் இஸ்லாம்

- பாத்திமா மைந்தன்

‘‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான். பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான்’’ (திருக்குர்ஆன்–13:2) என்றும்,


‘‘நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்துள்ளான்’’ (திருக்குர்ஆன்–31:10) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

வானங்களுக்கும் பூமிக்கும் தூண்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையிலேயே ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்ற சொல்லால் இறைவன் சுட்டுகிறான்.

‘தூண்களின்றி வானத்தைப் படைத்தான்’ என்று கூறாமல், ‘நீங்கள் பார்க்கக் கூடிய தூண்களின்றி’ என்ற தேர்ந்தெடுத்த வார்த்தையை இறைவன் தேர்வு செய்திருக்கிறான். பேரண்டத்தின் படைப்பில் கண்களுக்கு புலனாகாத தூண்கள் உள்ளன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் தத்தமது பாதைகளை விட்டு விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம். இந்த அறிவியல் உண்மையைத்தான், ‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி’ என்று இறைவன் இயம்புகின்றான்.

‘அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்’ (திருக்குர்ஆன்–2:22) என்றும்,

‘வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம்’ (திருக்குர்ஆன்–21:32) என்றும்,

‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்’ (திருக்குர்ஆன்–40:64) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

இந்த வசனத்தில் வானத்தை ‘முகடு’ என்றும், அதுவும் ‘பாதுகாக்கப்பட்ட முகடு’ என்றும் இறைவன் சொல்கிறான்.

‘முகடு’ என்பதைக் ‘கூரை’ என்றும் பொருள் கொள்ளலாம்.

வானத்தை முகடு, கூரை என்று கூறுவதாக இருந்தால், அது மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு மேலே வெட்டவெளியாகத் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக இருக்க முடியும்? என்ற வினா எழலாம்; சிலர் வினா எழுப்பலாம்.

‘வானம் பூமிக்குக் கூரையாக அமைந்துள்ளது’ என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 சென்டிகிரேடாக இருக் கிறது. சந்திரனுக்கு அருகில் உள்ள பூமியிலும் இதே போன்ற வெப்பம்தானே இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேடு அளவு வெப்பமே உள்ளது. இதற்குக் காரணம் பூமியின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள வாயுக்கள் நிரம்பிய காற்று மண்டலமே காரணமாகும்.

காற்று மண்டலம் ஐந்து அடுக்குகளாக அமைந்துள்ளது.

முதல் அடுக்கு:

இதன் வரையறை பூமியின் மேற்பரப்பில் இருந்து 12 கிலோ மீட்டர் உயரம் ஆகும். காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கரியமில வாயு போன்ற வாயுக்களின் பெரும்பாலான அளவு இந்த அடுக்கிலேயே அடங்கியுள்ளது. இந்த அடுக்கில் வாயுக்கள் அதிகம் உள்ளதால் இது கூரைபோல செயல்படுகிறது. சூரியனில் இருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம், பூமியை முழுமையாகத் தாக்காமல் தடுக்கிறது. மழையைத் தரும் மேகங்கள் வானில் மிதந்து கொண்டிருப்பதும் இந்த அடுக்கில்தான். ஆகாயத்தில் விமானங்கள் பறந்து செல்வது இந்த முதல் அடுக்கின் மேற்பகுதியில்தான்.

இரண்டாம் அடுக்கு:

இது 12 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை பரந்துள்ளது. அபாயகரமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் படலம் இந்த அடுக்கில்தான் அமைந்துள்ளது. இது பூமியில் வாழும் உயிரினங்களைக் காக்கும் கேடயமாக அமைந்துள்ளது.

மூன்றாம் அடுக்கு:


50 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வரை பரவியுள்ள காற்று மண்டலத்தின் பகுதி மூன்றாம் அடுக்கு ஆகும். அவ்வப்போது விண்கற்கள் பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது இந்த அடுக்கில் காற்றுடன் உரசிக் கொண்டு அவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதிக எடை கொண்ட விண்கற்கள், மிகுந்த வேகத்தோடு நேரடியாகப் பூமியைத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில், மூன்றாம் அடுக்கில் அவை எரிந்து சாம்பலாகும் நிலையை ஏற்படுத்தி, வானத்தை இறைவன் ஒரு பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கி இருக்கின்றான்.

நான்காம் அடுக்கு:

இது 85 கிலோ மீட்டர் முதல் 600 கிலோ மீட்டர் வரை பரவி உள்ளது. பூமியில் இருந்து செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் இந்த அடுக்கில் இருந்தபடி பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஐந்தாம் அடுக்கு:

600 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பரவி உள்ள இந்த அடுக்கு காற்று மண்டலத்தின் கடைசி எல்லையாகும். இதற்குப் பிறகு வெற்றிடமாக விளங்கும் விண்வெளிப்பகுதி தொடங்கி விடுகிறது.

காற்று மண்டலம் இருப்பதன் காரணமாகவே பூமியில் மழை வளம் ஏற்படுகின்றது. காற்று மண்டலம் இல்லாவிட்டால், பூமி ஒரு பனி மூடிய, உறைந்த உயிரற்ற கோளாக இருந்திருக்கும்.

காற்று மண்டலம் ஒரு பாதுகாப்புப் போர்வையாக இருப்பதால் உயிரினம் வாழ்வதற்கு ஏதுவாகவும், சாதகமாகவும் பூமி அமைந்துள்ளது.

மேற்கண்ட காரணங்களால் திருக்குர்ஆன் கூறுவதைப்போல வானம், பூமிக்குப் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைந்துள்ள அற்புதத்தை அறிந்து கொள்ளலாம்.

(தொடரும்)தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.