குழந்தை வரம் அருளும் கடுவெளி சித்தர்


குழந்தை வரம் அருளும் கடுவெளி சித்தர்
x
தினத்தந்தி 14 March 2017 1:45 AM GMT (Updated: 13 March 2017 1:54 PM GMT)

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு வந்தது. மனிதர்களை, அவர் களின் பிறப்பை உணர்ந்து இறைவனுடன் இணையச் செய்வதற்காகவே அவதரித்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பிறந்த இடமும், அவர்கள் உலாவிய இடமும், சித்தர்கள் சமாதி அடைந்த இடமும், சித்தர்கள் அருளாசி கிட்டும் இடமும் சித்தர் பீடமாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் கடுவெளி சித்தர். இவர் திருஇரும்பை மாகாளத்தில் (திண்டிவனம்) பிறந்து, வாழ்ந்து அங்கு பல சித்துகளை செய்து மக்களை மகிழ்வித்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கி அங்கு சில சித்துகளை செய்துள்ளார். பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கிருந்து கடுவெளியில் ஒளிவடிவான பரம் பொருளை தேடிவந்து சித்தாடல் புரிந்து 35 பாடல்களை இயற்றி உள்ளார். கடுவெளியில் உள்ள சிவபெருமானை பரமநாதர் என்று தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தவம் செய்வதாலும், தான–தருமங்களை செய்வதன் மூலமும் இறைவனை அடைய முடியும் என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கியவர் கடுவெளி சித்தர்.

கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்–சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது.

கடும் தவம் மேற்கொண்டு தனது சித்துவிளையாடல்கள் மூலம் பக்தர்களை ஈர்த்தவர் கடுவெளி சித்தர். கடுவெளி சித்தர் இறைவனை வெட்ட வெளியில் வழிபட்டு வந்தார். அவர் வணங்கிய சிவனின் திருநாமம் பரமானந்தர். அம்பாளின் பெயர் பாலாம்பிகை. சித்தர்கள் அம்பாளை தங்களுக்கு சக்தி கொடுப்பதற்காக வணங்குவர். கடுவெளி சித்தர் பராசக்தியை வாலைக்குமரியாக வழிபட்டார்.

ஆலயம் அமைந்துள்ள ஊர் கடுவெளி. சித்தர் உறைந்ததும் இங்கேதான். அதன் அருகில் உள்ள ஊர் சித்தாலத்தூர். அதாவது கடுவெளி சித்தர் அடக்கமானதால் கடுவெளி சித்தர் ஆலத்தூர் என்பது மருவி கடுவெளி சித்தராலத்தூர் என அழைக்கப்பட்டது.

கடுவெளி சித்தர் சிவபெருமானை துதித்து உள்ளமுருக பாடி வழிபட்டார். அப்போது அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தம்முடைய பேரன்பை வெளிப்படுத்தும் வண்ணம் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாக பிளக்க வைத்தாராம். சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாக பல புராணங்களில் படித்திருந்தாலும், கடுவெளி சித்தரை மகிழ்விக்க இறைவன் வெளிப்பட்டதும் அவ்விதமே இருக்கவேண்டும்.

‘நந்தவனத்திலோர் ஆண்டி–அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி– அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’


–என்ற பிரபலமான பாடலை இயற்றியவர் இந்த கடுவெளி சித்தர் தான்.

ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையெடுத்து உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனம் ஒன்றை பார்க்கிறான். அதில் விதவிதமாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செடி, கொடிகளுக்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும் என்று நினைத்தான். உடனடியாக ஒரு குயவனிடம் சென்று, தனக்கு தோண்டி ஒன்றை கொடுக்குமாறு கேட்கிறான்.

அதற்கு குயவன் ஒரு தோண்டிக்கு எட்டணா விலை கேட்கிறார். ஆண்டியிடம் காசு இல்லை. இப்படி ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியும் தோண்டியை பொறுமையுடன் கேட்டுவந்தான். ஒரு நாள் குயவன் மனமிரங்கி தோண்டி யொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டிக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் தோண்டியை தலையில் வைத்துக் கொண்டு ஆடியபோது, அது கீழே விழுந்து உடைந்தது.  

இது சாதாரண ஆண்டி, குயவன் கதையல்ல; மனிதனின் ஜீவ ரகசியம். ‘பத்து மாதங்கள் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை மனிதன் போற்றி பாதுகாக்காது, அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே’ என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.

பத்து மாதங்கள் தவம் செய்து பெற்றது மனிதா. நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானோ? எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளி சித்தர்.

கடுவெளி சித்தர் ஜீவசமாதியில் சிறிய அகல்விளக்கில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும்போது, அதன் வெளிச்சம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது பெரிய அளவில் தெரிகிறது. கோவிலில் அர்ச்சகர் சங்கு ஊதி பூஜை செய்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதி அருகில் நின்று கொண்டு நாய் (பைரவர்) சங்கு ஊதுவதைப் போன்றே ஒலி எழுப்பி சித்தரை வணங்கும் நிகழ்வு என்றே அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.  

பிரபஞ்ச வெளியில் (கடுவெளி) இருந்துதான் ஆன்மாவானது தாயின் கருவறைக்குள் செல்கிறது. இங்கு வெட்டவெளியாக, கடுவெளியாக சித்தர் அருள் நிலவுவதால் நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கடுவெளி சித்தருக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்படும். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படுகிறது.

மோட்ச தீபம்


கடுவெளி சித்தர் சூரிய கிரகத்துக்கு உரியவர். சூரிய கிரகத்தை ஆத்மகாரகன், பிதுர்காரகன் என்பார்கள். அதாவது முன்னோர்களாக என்றும் நிலைத்து விளங்குபவன். கடுவெளி சித்தர் வழியாக கடுவெளி பரமநாதரை (சிவபெருமானை) வணங்கினால், ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோ‌ஷங்கள் யாவும் நீங்கும். மேலும் கடுவெளியில் மோட்ச தீபம் ஏற்றி நமது முன்னோர்களை நினைத்து கடுவெளி சித்தரையும், பரமநாதரையும் வணங்கினால் முற்பிறப்பு பாவங்களும், பித்ரு சாபங்களும் அடியோடு நீங்கி வாழ்க்கை வளமாகும்.

–செந்தூர் திருமாலன்

Next Story