ஈசனால் கண் ஒளி பெற்ற தண்டியடிகள்


ஈசனால் கண் ஒளி பெற்ற தண்டியடிகள்
x
தினத்தந்தி 17 March 2017 12:30 AM GMT (Updated: 16 March 2017 12:06 PM GMT)

திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள். இவர் பிறப்பிலேயே கண் ஒளி இல்லாதவர். தீவிர சிவ பக்தரான இவர், அகக் கண்ணால் இறைவனைக் கண்டு வழிபட்டு வந்தார்.

திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள். இவர் பிறப்பிலேயே கண் ஒளி இல்லாதவர். தீவிர சிவ பக்தரான இவர், அகக் கண்ணால் இறைவனைக் கண்டு வழிபட்டு வந்தார். தினமும் இறைவனின் ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவதொண்டு செய்து வாழ்ந்தார். அவர் வழிபட்டு வந்த சிவன் கோவிலின் திருக்குளம் சீர்கேடாய் இருந்தது. குளத்தைச் சுற்றி சைவ எதிர்ப்பாளர்கள் சிலர் இருந்ததே இதற்கு காரணம்.

இதுபற்றி அறிந்த தண்டியடிகள், மனம் வருந்தினார். குளத்தை சுத்தம் செய்ய முன் வந்தார். குளத்தின் நடுவில் ஒரு தறியும், குளக்கரையின் மேட்டில் ஒரு தறியும் நட்டு, இரு தறிகளையும் இணைக்கும்படி கயிறு ஒன்றை கட்டினார். கயிற்றைப் பிடித்தபடியே குளத்தில் இறங்கி மண்ணை கூடையில் எடுத்து வந்து கரை மேட்டில் கொட்டி, தூர்வாரும் பணியைச் செய்தார். அந்த நேரத்தில் அவர் நாவு, பஞ்சாட்சரத்தை உச்சரித்தபடி இருந்தது.

தண்டியடிகளின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளத்தில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தண்டியடிகளிடம் வந்து பணியை நிறுத்தும்படி கூறினர்.

அவரோ, ‘இது ஈசனுக்குரிய திருப்பணி.. நிறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை’ என்றார்.

ஆனால் அந்த சைவ எதிர்ப்பாளர்கள், ‘உனக்கு கண் இல்லை என்றால், காதும் கேட்கவில்லையா? நாங்கள் சொல்வதை கேட்டு  இங்கிருந்து போய்விடு’ என்று மிரட்டினர்.

தண்டியடிகள், ‘நான் ஈசனின் திருவடியை மட்டுமே காண்கிறேன். அவனருளால் என் கண் ஒளிபெற்று, உங்கள் கண் ஒளி இழந்தால் என்ன செய்வீர்கள்?’ என்றார்.

‘அப்படி ஒன்று நடந்தால், நாங்கள் இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்’ என்று கூறிய எதிராளர்கள், தண்டியடிகளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

மனமுடைந்த தண்டியடிகள், ஈசனின் சன்னிதி முன்பு அமர்ந்து தன்னுடைய நிலையைச் சொல்லி முறையிட்டார். அப்படியே உறங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘உன் மனக்கவலையை விடு. உன்னுடைய சபதம் நாளை நிறைவேறும்’ என்று அருளினார்.

சிவபெருமான் அத்தோடு நில்லாமல், அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் கனவிலும் தோன்றி, ‘தண்டி என்னும் அன்பன் எமக்கு குளம் சீர்செய்யும் பணிபுரிந்தான். அவனுக்கு சிலர் இடர் செய்தார்கள். நீ போய் அதை சரி செய்’ என்றார்.

மன்னன் திடுக்கிட்டு எழுந்தான். இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்தார். அதிகாலையிலேயே தண்டியடிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தான்.

எதிர்ப்பாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தினான். அவர்கள், ‘தண்டி கண் ஒளி பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே போய் விடுகிறோம்’ என்றனர்.

அவர்களின் சபதத்தை ஏற்ற தண்டியடிகள், திருக்குளத்தை நோக்கிச் சென்றார். பின்னர் சிவனின் நாமத்தை உச்சரித்தப்படி திருக் குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது, அவரது கண்கள் ஒளி பெற்றிருந்தன. அதே நேரம் எதிர்ப்பாளர்களின் கண்கள் பார்வையை இழந்தன. தண்டியடிகளின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர்.

எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார், இறுதியில் சிவபதம் அடைந்தார்.

Next Story