ஆன்மிகம்

மயிலின் சாபம் நீங்கிய மலை தலம் + "||" + Curse of the Peacock spot away from the mountain

மயிலின் சாபம் நீங்கிய மலை தலம்

மயிலின் சாபம் நீங்கிய மலை தலம்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அவற்றுள் குன்றக்குடி முருகப் பெருமான் கோவில் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், பிரார்த்தனை தலங்களில் மேன்மை பெற்றதாகவும் விளங்குகிறது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அவற்றுள் குன்றக்குடி முருகப் பெருமான் கோவில் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், பிரார்த்தனை தலங்களில் மேன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தில் காவடி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மயில் உருவம் கொண்ட மலை மீது இந்த மூலவரான சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே, மலையாகிப்போனதாகவும், அந்த மலைமீதுதான் முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது.

ஒரு முறை அசுரர்கள், தேவர்களை அழிக்கும் நோக்கில் செயல்பட்டனர். அப்போது முருகப்பெருமானின் மயிலிடம் அசுரர்கள், ‘நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள், வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன’ என்று பொய் கூறினர். இதைக் கேட்டு கண் மூடித்தனமாக கோபம் கொண்ட மயில், பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

இதுபற்றி பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் தவறான வார்த்தைகளைக் கேட்டு, கண்மூடித்தனமாக நடந்துகொண்ட மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து மலையாகிப்போனது. மலையாக இருந்த படியே முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமான், மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். பின்னர் மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார்.

இந்த ஆலயம் அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலமாகும். இங்கு முருகப்பெருமான், சண்முகநாதர் என்ற திரு நாமத்துடன், ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டி முருகன், மயூரகிரிநாதர், மயில் கலைக்கந்தன், குன்றை முருகன், குன்றையூருடையான், தேனாறுடையான் என்பது இந்தல முருகனின் வேறு பெயர்களாகும். இங்கு முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்றனர்.

குன்றக்குடி மலையின் மேல்பகுதியில் முனிவர்கள், ஞானிகள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக கற்படுக்கைகளும், பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் குடைவரைக் கோவில் சன்னிதிகள்  நிறைய காணப்படுகின்றன. கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிஷ்ட முனவர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன், அகத்தியர், பாண்டவர்கள் போன்றோர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல மரம் அரச மரமாகும். தல தீர்த்தம் தேனாறு. சரவணப் பொய்கை, மயில் தீர்த்தம் போன்றவையும் உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழா மற்றும் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருநாள் போன்றவை இந்த ஆலயத்தின் மிகப்பெரிய திருவிழாக்களாகும். இது தவிர சித்திரையில் பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஆவணி மூலம் அன்று பிட்டுத் திருவிழா, புரட்டாசியில் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவை சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆலயத்தில் காவடி எடுத்தல் மிகவும் விசே‌ஷமானது. பால் குடம் எடுத்தல், உடல்பிணி தீர அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை நினைத்ததை நிறைவேற்றும் நேர்த்திக்கடன்களாகும். வெள்ளியில் ஆன உடல் அங்கங்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டால் தோல் வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சரவணப்பொய்கையிலும், இடும்பம் சன்னிதியிலும் உப்பு, மிளகு போட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது. இன்னும் சிலர் அரிசி கொண்டு வந்து மலைப் படிகளில் தூவுகின்றனர். இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மலையின் கீழ் பகுதியில் தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். அகத்திய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டவர் இந்த சிவபெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயம் தேனாற்றங்கரையில் அமைந்துள்ளதால், இறைவனுக்கு தேனாற்றுநாதர் என்ற பெயர் வந்தது. இத்தல அம்பாள் அழகே வடிவாக அருட்சக்தி என்ற நாமத்துடன் எழுந்தருளியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.

ஆசிரியரின் தேர்வுகள்...