6. துஷ்ட சக்திகளும் வூடூவும்!


6. துஷ்ட சக்திகளும் வூடூவும்!
x
தினத்தந்தி 11 April 2017 2:15 AM GMT (Updated: 10 April 2017 12:48 PM GMT)

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ‘வூடு’ என்ற வித்தியாசமான இறை வழிபாட்டு முறைகள் பற்றி இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.

முன்கதை சுருக்கம்: உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ‘வூடு’ என்ற வித்தியாசமான இறை வழிபாட்டு முறைகள் பற்றி இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். வூடு உருவான விதம், இறைவனை அந்த மக்கள் பூஜிக்கும் வழிமுறைகள் பற்றி பார்த்தோம். இந்த வாரம் வூடுவின் மூலமாக செய்யப்படும் துஷ்ட சக்திகளின் ஏவல் பற்றிப் பார்க்கலாம்.

வூடூவில் பிற்காலத்தில் கருப்பு மேஜிக், வெள்ளை மேஜிக் என்ற பிரிவுகள் பேசப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் அப்படிப் பிரிவுகள் இருக்கவில்லை. பிற்காலத்தில் நன்மைகள் செய்யும் வூடு வெள்ளை மேஜிக் என்றும், அடுத்தவருக்குத் தீமைகள் ஏற்படுத்தச் செய்யும் வூடூ கருப்பு மேஜிக் என்றும் அழைக்கப்பட்டது. அதோடு சிவப்பு மேஜிக் என்ற பிரிவும் பேசப்பட்டது. வூடூ சடங்கின் மூலம் துஷ்டசக்திகள் ஒரு உடலில் வரவழைக்கப்பட்டால் எந்த மனிதனின் உடலில் துஷ்டசக்தி உள்ளே நுழைகின்றதோ அந்த மனிதனின் கண்கள் வூடூ சடங்கின் உச்சக்கட்டத்தில் சிவப்பாகி விடும். அதனால் அதை சிவப்பு மேஜிக் என்றழைத்தார்கள்.

ஆன்மிகம் கோலோச்சிய ஆரம்ப கால வூடூவில் துஷ்டசக்திகளை அடுத்தவர் மீது ஏவி விடுவது அபூர்வமாகவே நிகழ்த்தப்பட்டது என்றாலும், பிற்காலத்தில் அது அதிகமாகி பிரதான இடம் வகிக்க ஆரம்பித்தது. துஷ்டசக்திகளை அடுத்தவர் மீது ஏவி விடுவதன் விளைவுகளை ஆரம்பக் கட்டம், முதிர்ந்த கட்டம், அபாயக் கட்டம்  என மூன்று நிலைகளில் சொல்கிறார்கள்.

துஷ்டசக்தி ஏவி விடப்பட்டால் ஆரம்பக் கட்டத்தில் தூக்கமின்மை, கடும் களைப்பு, பயம், காரணமில்லாமல் எரிச்சல், கோபம், இரவில் தொண்டை வறண்டு போதல் ஆகியவை ஏற்படும் என் கிறார்கள்.

முதிர்ந்த கட்டத்தில் இறந்த உடல்களையும், கோரமான மனிதர்கள் கொல்ல வருவதையும் கனவில் காணுதல், பாம்புகளையும், தேள்களையும், பெரிய சிலந்தி களையும் கனவில் காணுதல், கனவில் மிகுந்த உயரங்களில் இருந்து வீழ்வதாகக் காணுதல், பயத்தில் விழித்தல், விழித்த பின் மூச்சுத் திணறலை உணர்தல், வயிறு வீங்குதல், இடைவிடாத தலைவலி, உடல் கருத்தல், உடலில் அங்கங்கே சொறிதலையும் வலியையும் உணர்தல் போன்ற அறிகுறிகள் தெரியும் என்கிறார்கள்.

அபாயக்கட்டம் என்று சொல்லப்படும் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் கட்டத்தில் கேன்சர், கிட்னி பழுதாதல், மாரடைப்பு, அதீதமாய் மதுவுக்கு அடிமையாதல், தற் கொலைக்கு முயற்சி செய்தல், மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கு உட்படுதல் ஆகியவற்றைச் சொல்கிறார்கள்.

இந்த மூன்று நிலை அறிகுறிகளும் சாதாரணமாக எங்கும் காணப்படும் நிலைகள் தான் என்பதால் இயல்பாக ஒருவருக்கு வரும் இந்த பிரச்சினைகள் கூட வூடூவினால் ஏவி விடப்பட்டதாகக் கருதப்படும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். எனவே இயல்பான உடல்நலக் குறைவினால் ஏற்படும் நிலையா, இல்லை கருப்பு மேஜிக் என்று சொல்லப்படும் வூடூ துஷ்டசக்திகளின் ஏவலால் ஏற்படும் நிலையா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது.

இயற்கையாய் உடல் கோளாறுகளால் வந்த உபாதைகள் பொதுவாக மருத்துவர்களால் சரியாக கணிக்கப்பட்டு குணப்படுத்தவும் முடிந்தவையாக இருக்கும். ஆனால் துஷ்ட சக்திகளின் ஏவலினால் ஏற்படும் உபாதைகள் மருத்துவர் களால் சரியாகக் கணிக்கவோ, குணப்படுத்தவோ முடியாதவையாக இருக்கும். அப்படி குணப்படுத்தினாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். திரும்பவும் அந்தப் பிரச்சினை தொடரும். மேலும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் நெருங்குகையில் அந்த உபாதைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் துஷ்ட சக்திகளின் ஏவலினால் ஒருவர் கஷ்டப்படும் போது இறைவனைத் தியானிப்பதற்கும் பிரார்த்திப்பதற்கும் கூட மனம் இசையாது.  இறை தியானம் முழுமையாக இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் இருக்க முடியாது என்பதையும் வூடூ நம்புகிறது.

ஏவி விடப்பட்ட துஷ்டசக்தி மிகவும் வலிமையானதாக இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட வித்தியாச அனுபவங்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

*    உறங்க ஆரம்பித்தவுடன் திடீரென்று பயத்தில் உலுக்கி விட்டதைப் போல் அதிர்ந்து விழித்துக் கொள்வது.

*    கருப்பு அல்லது சாம்பல் புகையை கண்முன்னால் காண்பது.

*    உடல் நிறம் கருக்க ஆரம்பிப்பது.

*    உடலின் பல இடங்களில் பயங்கரமான வலியை உணர்வது.

*    நாக்கில் திடீர் வலியை உணர்வது அல்லது நாக்கில் புண் ஏற்பட்டு தூக்கத்தில் வலி தாங்காமல் விழித்துக் கொள்வது.

*    தீயில் கை வைத்தது போல் உள்ளங்கையில் எரிச்சலை உணர்வது.

*    உடலில் அங்கங்கே வீங்குவது.

*    உடலில் எறும்புகள் ஊர்வது போலவோ, உடல் பாகங்களில் லேசான அதிர்வுகளையோ உணர்வது.

*    வீட்டுக்குள் பலவித பூச்சிகளின் ஆதிக்கம் ஏற்படுவது. அவை பெருகிய வண்ணம் இருப்பது.

இது போன்ற அனுபவங்கள் தொடருமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு நவீன மருத்துவத்தில் எதையும் தீர்மானமாகக் கண்டுபிடிக்க முடியாது. நவீன மருந்துகளும் எந்த வகையிலும் உதவாது. கூடிய சீக்கிரமே படுத்த படுக்கையாகி மரணத்தையும் அந்த நபர் சந்திக்க நேரிடும்.

இப்படி மரணத்தையும் வரவழைக்கும் அளவு வலிமையான ஒருவர் மீது துஷ்டசக்தி பிரயோகத்தை வூடூவில் எப்படி ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம். யார் மேல் துஷ்டசக்தியைப் பிரயோகிக்க வேண்டுமோ அவர்களது உடை, முடி, நகம், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு  பொம்மையை உருவாக்குகிறார்கள். பழங்காலத்தில் வூடூ சடங்கு ஒன்றை நடத்தி அந்தப் பொம்மையின் இதயப்பகுதியில் மட்டும் ஒரு துளையை ஏற்படுத்தி விட்டு வைப்பார்கள். பின் ஏதாவது ஒரு விலங்கின் இதயத்தை துடிக்கும் நிலையிலேயே எடுத்து அந்த துளைக்குள் வைப்பார்கள். (ஆனால் நவீன காலத்தில் விலங்கின் இதயத்தை எடுத்து வைக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அதற்கு இணையாக பாவனையுடன் கூடிய குறிமுறை பயன்படுத்தப்படு கிறது) பின் சம்பந்தப்பட்ட ஆளின் பிராணசக்தியை அந்தப் பொம்மையுடன் இணைக்கும் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.  முடிவில் அந்தப் பொம்மையில் அந்த ஆளின் பிராணசக்தியை வூடூ சடங்கை நடத்தும் மந்திரவாதியால் உணர முடிந்தால் அந்த சடங்கு வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள். பல சமயங்களில் ஒரு முறையில் அந்த மந்திர வாதி வெற்றி பெற முடிவதில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவர் முயற்சிக்க வேண்டி வரும்.

வெற்றிகரமாக அந்த பொம்மையில் அந்த ஆளின் சக்தியை இணைத்த பின் வூடூ மந்திரவாதி இரண்டு அல்லது மூன்று அங்குல ஊசிகளை எடுத்து அந்தப் பொம்மையில் முக்கியமான அக்குபஞ்சர் மையங்களில் குத்துகிறார். அந்த மையங்களின் வழியாக இயங்கும் உடலின் பாதுகாவல் சக்தி அவரது அச்செயலினால் தடைப்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் மந்திரவாதி அப்படி பொம்மையில் ஊசிகளைக் குத்தும் போது சம்பந்தப்பட்ட ஆள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நிஜமாகவே ஊசிகள் குத்தியது போல்  தன் உடலில் அந்தந்த இடங்களில் வலியை உணர்வார். அதன் பின் அந்த ஆள் சிறிது சிறிதாக மந்திரவாதியின் வசமாவார். பாதுகாப்பு அரண் வீழ்த்தப்படும் போது சம்பந்தப்பட்ட ஆள் பெரும்பாலும் தலை, நெற்றிப்பொட்டு, கைகளின் பெருவிரல்கள், அந்தரங்கப்பகுதிகள் ஆகியவற்றில் அதன் விளைவுகளை உணர்வார். அவர் ஏதாவது செய்து தன்னைக் காத்துக் கொண்டால் ஒழிய சிறிது சிறிதாக தன் சக்திகளை இழக்க நேரிடும். கடைசியில் ஏவல் செய்பவர்களின் நோக்கம் நிறைவேறி அவர் துன்பப்பட நேரிடும். ஒரு ஏவல் 28 நாட்களில் ஒருவரை இறக்க வைக்கவும் முடியும் என்கிறார்கள்.

சில சமயங்களில் வூடூ பொம்மைகளில் வெள்ளைப்பூண்டு, பூவிதழ்கள், வாசனைப் பொருட்கள், பணம் ஆகிய வற்றையும் இணைப்பதுண்டு. அது சில துர்த்தேவதைகளை அந்த பொம்மைக்குள் இறங்க வைக்கச் செய்யும் உபாயமாகச் சொல்கிறார்கள்.

இறந்த பிரேதங்களின் சாம்பலை, குடிக்கும் பானங்களில் கலந்து கொடுத்து செய்வினை செய்வதும் வூடூவில் உண்டு. அதை அறியாமல் குடிக்கும் நபர் அந்த செய்வினையால் துன்பப்படுவதுண்டு. அவர்கள் சாப்பிடும் உணவில் அந்த சாம்பலைக் கலந்து தருவதும் உண்டு. இது விரைவில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்கிறார் கள். எனவே வி‌ஷயமறிந்தோர் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் உணவையோ, பானங்களையோ ஏற்பதில்லை. அப்படியும் சாப்பிட்டே ஆக வேண்டிய நிலைமை இருந்தால் உணவளிப்பவர்களுடன் பகிர்ந்தே சாப்பிடும் அளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

வூடூவில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு துஷ்ட சக்திகளை ஏவி விட  வூடூ பொம்மைகள், பிரேத சாம்பல் ஆகியவை கூட தேவையில்லை. ஒருவர் பெயர், அவருடைய தாயாரின் பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றை வைத்துக் கொண்டே துஷ்ட சக்திகளை ஏவி விட அவர் களால் முடியும்.

தங்களுக்குத் துன்பம் விளைவிப்பவனை பழிவாங்க வேண்டி மன்மன் ப்ரிகிட்டே என்ற (விணீஸீனீணீஸீ ஙிக்ஷீவீரீவீttமீ  ) தேவதையை வூடூவில் நாடுகிறார்கள். இந்த தேவதை மயான தேவதையான பேரன் சமேடியின் மனைவியாக சொல்லப் படுகிறது. இது ஒரு மனிதனைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்த வல்லதாக கருதப்படுகிறது.

மரண தேவதையின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த பிறகு ஒருவனைக் காப்பாற்றுவது வூடூவில் மிகவும் கடினமான செயலாகக் கருதப்படுகிறது. அப்படிக் காப்பாற்றும் பட்சத்திலும் அந்த உயிருக்கு ஈடாக இன்னொரு உயிரைப் பணயம் வைக்க வேண்டுமாம்.  இது போன்ற நிகழ்வுகளில் கோழிகள் மட்டுமல்லாமல் அந்த வாழை மரமும் இறந்து விடுமாம். வாழை மரமோ, அந்த ஆளோ இரண்டில் ஒன்று இறந்து விடுவது உறுதியாக நடக்குமாம். அவர்கள் வேண்டுதலை மரண தேவதை ஏற்கா விட்டால் ஆள் மரணித்து வாழைமரம் பிழைத்திருப்பதும் நடப்பதுண்டாம். இந்த இரண்டில் ஒன்று நடக்காமல், அங்கு வரைந்த மண்டலங்கள் அழிக்கப் படுவதில்லை. அந்த ஆள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவதுமில்லை.

–தொடரும்.

Next Story