குழந்தை வரம் அருளும் தருமலிங்கேஸ்வரர்


குழந்தை வரம் அருளும்  தருமலிங்கேஸ்வரர்
x
தினத்தந்தி 11 May 2017 11:30 PM GMT (Updated: 11 May 2017 12:49 PM GMT)

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தருமலிங்கமலை. இந்த மலையின் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் இறைவன், தருமலிங்கேஸ்வர சுவாமி. இந்த மலையின் அடிவாரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது.

தருமலிங்கேஸ்வரர் - முருகப்பெருமான்

அதையொட்டி ஒரு திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டபத்திற்கு மேல் பகுதியில் இயற்கை வழிபாடாக புற்று வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்ணாந்து பார்த்தால் மலையின் உச்சியில்  தருமலிங்கேஸ்வரர் ஆலயம் நம் கண்களுக்குத் தெரியும்.

சுமார் 100 படிகளைக் கடந்தவுடன் மூன்றடுக்கு ராஜ கோபுரம் உள்ளது.  அழகான அந்த கோபுரத்தைக் கடந்து மேலே நடந்தால், இதமான தென்றல் நம்மை தாலாட்டியபடியே தொடர்ந்து வருவதை நாம் ரசனையோடு ரசிக்கலாம். சிறிது தொலைவு சென்றதும் அடியார்சாமி கோவில் வரும்.அதைக் கடந்து நாம் சீரற்ற படிகளைக் கடந்துதான் நடக்க வேண்டும். சில இடங்களில் படிகளே இல்லாமல் சரட்டென்று சரிவாய் இருக்கும் கருங்கற்களில் தைரியமாக காலை வைத்துதான் மேலே ஏற வேண்டும்.

சுற்றிலும் சில இடங்களில் அடர்த்தியும், சில இடங்களில் அடர்த்தி இல்லாத மரங்களின் கூட்டங்கள். அந்தக் காட்டுப் பகுதியை நாம் காணும் போதே நம் மனம் திக்திக் என்று அடித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. அந்த மலைத் தொடரில் யானை, மான், செந்நாய், மலைப் பாம்பு, மயில் போன்ற விலங்குகள் நடமாடுவதுண்டு என்றாலும், நம் கண்ணில் படுவதென்னவோ மயில்களும், குரங்குகளும் தான்.

மலைப்பாதை முழுவதும் நேரே நடந்து வலதுபுறம் திரும்பி மறுபடியும் நடந்து வலது புறம் திரும்பி, மீண்டும் நடந்து மீண்டும் திரும்பினால் தருமலிங்கேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். 

ஆலய அமைப்பு

முதலில் ஸ்தூபியும் கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம். நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது.  இருபுறம் துவார பாலகர்கள் காவல் நிற்க, உள்ளே கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது.

கோவில்தோற்றம்

கிரிவலம்

இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த கிரிவலத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்படும் கிரிவல பக்தர்கள் சுமார் 6 கி.மீ தொலைவு நடந்து மலையை சுற்றி வர வேண்டும். சித்திரை பவுர்ணமியில் நடைபெறும் கிரிவலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வது நம்மை வியக்க வைக்கும் உண்மை.

தினசரி இங்கு காலை பூஜை நடக்கும் போது ஒரு புதுமுறை கையாளப்படுகிறது. ஒரு தட்டில் நிறைய உதிரிப்பூக்களுடன் கருவறையை விட்டு வெளியே வரும் அர்ச்சகர் வெளியே நிற்கும் பக்தர்கள் அனைவர் கரங்களிலும் பூக்களை அள்ளித் தருகிறார். பின் அனைவரையும் தங்கள் விருப்பம் போல் பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்.

பிறகு அந்தப் பூக்கள் அனைத்தையும் ஒரு தட்டில் திரும்ப வாங்கிக் கொண்டு கருவறையின் உள்ளே செல்கிறார். கருவறையில் உள்ள தருமலிங்கேஸ்வரருக்கு அந்த உதிரி மலர்களாலேயே அர்ச்சனை செய்வது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

திருவிழாக்கள்

தினசரி மூன்று கால பூஜைகள் நடக்கும் இந்த மலைக் கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மாத பவுர்ணமி நாட்கள், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலிய நாட்களில் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆலயத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.  

முதல்நாள் மதுக்கரை ஊர்மக்களும், இரண்டாம் நாள் திருமலையம்பாளையம், மூன்றாம் நாள் எட்டிமடை மக்கள் என மூன்று நாட்களும் மூன்று ஊர்மக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து மகிழ்கின்றனர்.

தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னிதியில் மொட்டையடித்து, இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகள்.

இறைவன் சன்னிதியில் தமிழ் முறைப்படி திருமணங்கள் நடப்பதும் வாடிக்கையான காட்சிகள்.

சுமார் 1,000 அடி உயரத்தில் இருக்கும் இறைவனை தரிசிக்க நாம் சுமார் 818 படிகளை கடந்து செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் போது நம் மனதில் ஒரு உன்னதமான அமைதியும் மகிழ்ச்சியும் நிலவி நிற்பதை நாம் தவிர்க்க இயலாது. மாலை ஆறு மணிக்கு மேல் மலைமீது ஏற அனுமதியில்லை. கோவையிலிருந்து இத்தலம் செல்ல நிறைய பேருந்து வசதிகளும், ஆட்டோ, கால் டாக்ஸி வசதிகளும் உள்ளன.

கோவை-பாலக்காடு சாலையில் கோவையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள மரப்பாலம் என்ற ஊரில் உள்ளது இந்த மலை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவு நடந்தால் தருமலிங்க மலையை அடையலாம்.


Next Story