வாழ்வை உணர்த்தும் ‘வரம்’


வாழ்வை உணர்த்தும் ‘வரம்’
x
தினத்தந்தி 14 Jun 2017 9:58 AM GMT (Updated: 14 Jun 2017 9:58 AM GMT)

தன் கண்ணெதிரில் ஏராளமானவர்கள் மடிந்து போவதைக் கண்டும், தான் மட்டும் நெடுங்காலம் இருக்கப்போவதாக மனம் எண்ணுகிறதே. அதுதான் மிகப்பெரிய அதிசயம் என்கிறது ஜென் தத்துவம்.

ஜென் உலகில் ஒரு வழக்கம் பிரபலமானது. ஜென் குருக்களின் உபதேசங்களையும், அருளுரைகளையும் கேட்டு அவர்களின் பால் ஈர்க்கப்படும் மக்கள், ஜென் குருக்களை தனியாக சந்தித்து, அவர்கள் வாயால் தங்களுக்கென்று தனியாக ஏதாவது சொல்லும்படி கேட்டு எழுதி வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதனை தங்களின் வாழ்நாள் பொக்கி‌ஷமாக பாதுகாப்பவர்களும் உண்டு.

அப்படி ஒரு வார்த்தையை கேட்டுப் பெறுவதற்காகத்தான், அந்த ஞானியிடம் வந்திருந்தான் ஒரு அரசன்.

‘சுவாமி! எனக்கொரு இறுதி வாசகம் எழுதித் தாருங்கள். நீங்கள் எழுதிக் கொடுப்பது வாழ்வின் உண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்’ என்று ஞானியிடம் வேண்டினான்.

ஞானியும் மறுக்காமல் ஒரு துண்டு காகிதத்தில் ஒரு வாசகத்தை எழுதிக்கொடுத்தார்.

அதை வாங்கிப் படித்த அரசன் அதிர்ந்து போனான். ஏனெனில் அந்த துண்டுச் சீட்டில் இருந்த வாசகம் அப்படிப்பட்டது.

‘அப்பனும் இறப்பான்; பிள்ளையும் இறப்பான்

அதன்பின் பேரனும் இறப்பான்’

இப்படி ஒரு வாசகத்தை எழுதிக்கொடுத்தால், யாருக்குத்தான் அதிர்ச்சி ஏற்படாது. ஆனால் வந்தவன் அரசனாயிற்றே. அவனிடம் இருந்து அதிர்ச்சியோடு, கோபமும் வெளிப்பட்டுவிட்டது.

ஞானியைப் பார்த்து, ‘என்ன இது? இப்படி எழுதித் தந்துவிட்டீர்களே’ என்று சினத்துடன் கேட்டான்.

அவனது கோபத்தைக் கண்டு மிரளாமல், நிதானமாக பதிலளித்தார் ஞானி. ‘நீ வாழ்வின் உண்மையை எழுதித்தரச் செல்லிக் கேட்டாய். அழியாத, நிலையான உண்மை இதுதான். உன் தாத்தா எப்போதே இறந்துவிட்டார். உன் தந்தையும் சில நாட்களுக்கு முன்பு இறந்து போனார். நீயும் ஒரு நாள் இறப்பாய். அதே போல் உன்னுடைய மகனும் கூட ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும்’.

ஞானியின் பதிலைக் கேட்ட அரசன், ‘பிறந்தவர்கள் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உங்களைப் போன்ற ஞானிகள், மக்களுக்கு வரம் தருவதுபோல் வார்த்தைகளைச் சொல்லாமல் சாபம் தருவது போன்ற அபசகுனமான வார்த்தைகளும் எழுதித்தருவது முறையாகுமா?’ என்று மனக் குமுறலுடன் தெரிவித்தான்.

ஞானிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘என்ன.. நான் எழுதிக்கொடுத்தது சாபமா? அது பெரிய வரமப்பா? நன்றாக சிந்தித்துப் பார். நான் எழுதித் தந்தது சுப சகுனம் என்பது உனக்குப் புரியும். முதலில் அப்பன் இறப்பான். பிறகு பிள்ளை இறப்பான். பிறகு பேரன் இறப்பான் இதுதானே முறை. உன் பெற்றோர் தங்களது இறுதிச் சடங்கை நீ செய்ய வேண்டும் என்றுதானே ஆசைப் படுவார்கள்? நீ மறைந்து உனக்கு, உன் மகன் ஈமக் கடன்கள் செய்தால்தானே அது இயல்பு. மாறாக, நீ இருக்க உன் மகன் மறைந்து அவனுக்கு நீ இறுதிச் சடங்குகளைச் செய்ய நேரிட்டால் அது உன்னை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நினைத்துப்பார். அதுதான் சாபம். அப்படிப் பார்த்தால் நான் எழுதிக் கொடுத்த வாசகம் வரம் தானே. மரணம் என்பது இயல்பானது. அது இயல்பான முறையில் நிகழ்வதே வரம்; இறையருள்; சுபம் எல்லாமே’ என்றார் ஞானி.

அந்த விளக்கத்தைக் கேட்ட அரசன், வாசகத்தை கண்ணில் ஒற்றியபடி அங்கிருந்து புறப்பட்டான்.

உலகத்தில் வாழும் மக்கள், உலகில் உள்ள பலவற்றையும் பார்த்து இது அதிசயம்.. அது அதிசயம் என்று வியப்படைகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அதிசயமானதும், வியப்பானதுமான வி‌ஷயம் ஒன்று இருக் கிறது. அது யாதெனில், தன் கண்ணெதிரில் ஏராளமானவர்கள் மடிந்து போவதைக் கண்டும், தான் மட்டும் நெடுங்காலம் இருக்கப்போவதாக மனம் எண்ணு கிறதே. அதுதான் மிகப்பெரிய அதிசயம் என்கிறது ஜென் தத்துவம்.

Next Story