ஆன்மிகம்

தவறான தலைமை + "||" + Wrong leadership

தவறான தலைமை

தவறான தலைமை
ஒவ்வொருவரும் அவரை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மாடலயத் தலைவரின், முகம் சஞ்சலத்தால் சலனப்பட்டுக் கிடந்தது.
ஜென் கதை

டாலயத்தை அமைதி சூழ்ந்திருந்தது. நீண்ட நெடுங்கால மாக அந்த மடாலயத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், நோயால் பாதிக்கப்பட்டு, தனது காலத்தின் கடைசி கட்டத்தில் இருந்து கொண்டிருந்தார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனது. நிறைய பேர் அவரைச் சந்தித்து, அவரது உடல் நலம் பற்றி விசாரித்துச் செல்வதற்காக வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்கள் அனைவரும், மடாலயத்தின் தலைவரைச் சுற்றி சூழ்ந்து நின்று கொண்டு, அவருடைய பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் அவரை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மாடலயத் தலைவரின், முகம் சஞ்சலத்தால் சலனப்பட்டுக் கிடந்தது. அவரது முகத்தை பார்க்கும் போது, அங்கிருந்தவர்களின் பேச்சு அவருக்கு பிடிக்கவில்லை என்பது போல் தெரிந்தது.

ஒருவர், ‘இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? பற்றற்ற தன்மையில் இவர் போதிசத்துவருக்கு இணையானவர்’ என்று புகழ்ந்தார்.

‘ஆன்மிக வழியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் இவர்’ என்றார் இன்னொருவர்.

இன்னும் சிலர், ‘சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் எப்படித் தன் பாதையில் அணுவளவும் பிசகாமல் பணியாற்றுமோ, அப்படி தன்னுடைய கடமைகளில் இருந்து வழுவாத நிலையைக் கொண்டவர் இவர்’ என்றனர்.

‘மலரும், தென்றலும் பலன் கருதாது, உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவது போல, இவரும் பிரதிபலன் கருதாமல் செயல்புரிபவர்’ என்றது இன்னொரு கூட்டம்.

மடாதிபதியோ சங்கடத்தில் நெளிந்தார். அதைப் பார்த்த அவரது பிரதான சீடர் ஒருவர், மாடதிபதியைச் சூழ்ந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தவர்களை, கொஞ்சம் விலகி இருக்கும்படி சொன்னார். பின்னர் அந்த சீடர், படுக்கையில் இருந்த மடத்தின் தலைவர் அருகில் சென்று, ‘தலைவரே! இவர்கள் அனைவரும் இன்சொற்களைக் கூறுவதாக கருதி, உங்களின் மனதை கசக்கச் செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.

அதற்கு அந்த மடத்தின் தலைவரிடம் இருந்து எரிச்சல் தொனிக்கும் வகையில் பதில் வந்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொன்னவர், பின் வருத்தத்துடன் ‘இவர்கள் யாருக்குமே என்னைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. என்னிடம் உள்ள குணங்களிலேயே மிகவும் சிறப்பானது, என்னுடைய தன்னடக்கம் தானே!. அதைப் பற்றி இவர்களில் யாராவது வாயைத் திறந்தார்களா?’ என்றார்.

சீடருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே அங்கிருந்து விலகி வெளியேறிவிட்டார்.

ஒருவர் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து விடுவதால் மட்டுமே, அவருக்கு அதற்கான தகுதிகளும், குணங்களும் வந்துவிடுவதில்லை என்பதற்கு சரியான உதாரணமாக அந்த மடாலயத்தின் தலைவர் இருப்பதை நினைத்து சீடர் வெட்கித் தலைகுனிந்தார்.