பிறப்புகள் அனைத்தும் சிறப்பே..
யார்.. எந்த நிலையில் இருக்கிறார்களோ.. அவர்களுக்கு அந்த நிலை சிறப்பானதாகவே தோன்றும்.
ஜென் கதை
அது ஒரு பெரிய குரு குலம். அங்கு தலைமை குருவாக இருந்தவர், இன்னும் சில ஆண்டுகளில் தனது இறுதி காலத்தை எட்ட இருப்பதை நினைத்துக் கொண்டார். அவருக்கு ஒரு ஆசை பிறந்தது. மறு பிறவியில் நாம் என்னவாக பிறக்கப்போகிறோம் என்று அறிந்து கொள்ள அவர் ஆசை கொண்டார்.
மறுபிறவியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தவம் இயற்ற முன்வந்தார். அந்த தவத்தின் பலனாக அவர் 5 ஆண்டுகளில் இறக்கப் போவதையும், மறு பிறவியில் அவர் பன்றியாக பிறக்கப்போவதையும் அறிந்தார். தன்னுடைய அடுத்தப் பிறவி பன்றி என்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. அது ஒரு இழிபிறவி போல் அவருக்குத் தோன்றியது.
எனவே தன்னுடைய சீடர்களில் முதன்மையானவனும், தனக்குப் பிரியமானவனுமான ஒரு சீடனை அழைத்தார். அவனது கையில் ஒரு வாளைக் கொடுத்தார். அந்த சீடன் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இருந்தாலும் குரு தருவதை எப்படி வாங்க மறுப்பது? வாங்கிக் கொண்டான்.
இப்போது குரு பேசத் தொடங்கினார். ‘சீடனே! என்னுடைய இறுதி காலம் எனக்குத் தெரிந்து விட்டது. ஆனால் நான் எடுக்கப்போகும் மறுபிறவி அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அடுத்தப் பிறவியில் நான் பன்றியாக பிறப்பெடுக்க உள்ளேன். எனவே நீ இப்போதே புறப்படு. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நான் பிறந்திருக்கும் ஊரை அடைவாய். அங்கு பன்றியாக இருக்கும் என்னுடைய நெற்றியில், தற்போதைய என்னுடைய உருவம் தோன்றி மறையும். அதை வைத்து நான் தான் அது என்பதை புரிந்து கொண்டு, என்னை வாளால் வெட்டிக் கொன்றுவிடு’ என்றவர், மறுபிறவியில் தான் பிறக்கப்போகும் ஊரையும் சொல்லி அனுப்பினார்.
கால்நடையாக தன்னுடைய பெரும் பயணத்தை அந்த சீடன் தொடர்ந்தான். அவனது பயணம் ஐந்து ஆண்டுகளின் முடிவில், அவனது குரு சொன்ன இடத்திலேயே போய் முடிந்தது. அங்கு தன் கண்ணில் பட்ட சில பன்றிகளை உற்று நோக்கினான். ஆனால் அதில் தன் குரு இல்லை என்பதை உணர்ந்தான். பின்னர் அங்கிருந்த ஒருவரிடம், ‘இங்கே அதிகமான பன்றிகள் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டார்.
சீடனின் கேள்வியைக் கேட்டதும், அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார் அந்த நபர். இருப்பினும் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டினார்.
அங்கு சென்ற சீடன், பன்றிக்கூட்டத்தின் நடுவே தன்னுடைய குருவைத் தேடினான். அப்போது ஒரு பன்றியின் நெற்றியில் குருவின் உருவம் தென்பட்டது. அந்தப் பன்றியை மட்டும் தனியாகப் பிடித்து வந்து, வாளால் வெட்ட முயன்றான்.
அப்போது அந்தப் பன்றி பேசத் தொடங்கியது. ‘சீடா! நான் இந்த வாழ்வில் ஆனந்தமாக இருக்கிறேன். அதைக் கெடுத்துவிடாதே’ என்றது.
சீடன் அதிர்ச்சியில் விக்கித்து நின்றுவிட்டான்.
ஆம்! யார்.. எந்த நிலையில் இருக்கிறார்களோ.. அவர்களுக்கு அந்த நிலை சிறப்பானதாகவே தோன்றும். மனிதனாக இருந்தபோது, கீழ்நிலை பிறவியாக தோன்றிய பன்றி, அந்த குருவிற்கு இப்போது மகிழ்ச்சியான சொர்க்கபுரியாக தோன்றுகிறது. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தக்கூடியது என்பதுதான் இறைவனின் அழகிய படைப்புத் திறன்.
Related Tags :
Next Story