ஆன்மிகம்

சிவனை வலம் வரும் கிரிவலம் + "||" + Shiva Will around Kirivalam

சிவனை வலம் வரும் கிரிவலம்

சிவனை வலம் வரும் கிரிவலம்
திருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலமும் தான்.
திருவண்ணாமலை என்றதும் நினைவுக்கு வருவது அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவும், மாதம் தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலமும் தான். இதில் கிரிவலம் என்பது மிகவும் ஆத்மார்த்தமாக பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதால், முற்காலத்தில் சித்தர்கள் அனைவரும் இந்த மலையைச் சுற்றி பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர். இந்த ஐதீகமே இன்றும் தொடர்கிறது. 14 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த கிரிவலப் பாதையை பக்தர்கள் வலம் வரும்போது, சித்தர்களும் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பப்படுகிறது. கிரிவலப் பாதையை சுற்றிலும் அஷ்ட லிங்கங்களை தரி சனம் செய்யலாம். இந்த கிரிவலத்தால் வாழும் காலத்தில் அனைத்து ஐஸ்வரியங்களும், வாழ்வின் முடிவில் நற்கதியும் கிடைக்கும்.

கிரிவலத்தாலும், தீபத் திருவிழாவாலும் பெருமைபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், மேலும் பல பெருமை களைக் கொண்டது. நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு எனப்படும் பஞ்சபூதங்களுக்கான தலங்களில் அக்னியின் தலம் இது. ஆறு ஆதார தலங்களில் மணிபூரகத் தலம், முக்தி தலங்களில் ‘நினைத்தாலே முக்தி தரும்’ தலம், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் தவம் செய்த தலம், ஈசன் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்த தலம், தீவினைகளை தன் ஞானத்தீயில் இட்டு அழிக்கும் தலம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய ராஜகோபுரத்தைக் கொண்ட தலம், யுகம் யுகமாய் அழியாது நிற்கும் மலைத் தலம், 360 புனித தீர்த்தங்களைக் கொண்ட திருத்தலம், திருப்புகழின் முதல் பாடலை பெற்ற தலம். சமயக்குரவர்களால் பாடப்பெற்ற தலம் என இதன் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.