நல்லதைச் செய்தால் நல்லதைத் தருவார் - 19-12-2017 சனிப் பெயர்ச்சி


நல்லதைச் செய்தால் நல்லதைத் தருவார் - 19-12-2017 சனிப் பெயர்ச்சி
x
தினத்தந்தி 19 Dec 2017 4:47 AM GMT (Updated: 19 Dec 2017 4:49 AM GMT)

சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

னி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது பெயர்ச்சியின் போது அவ்வளவாக அலட்டிக்கொள்ளாதவர்கள், சனிப்பெயர்ச்சி என்று வரும்போது மட்டும் தங்களையும் அறியாமல், ‘என்ன நடக்குமோ.. ஏது நடக்குமோ..’ என்று தவியாய்த் தவிக்கிறார்கள்.

‘சனி பகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை.. கொடுப்பவரும் இல்லை’ என்ற சான்றோர் வாக்கை சரியாக புரிந்து கொண்டவர்கள் எவரும் இப்படி அச்சம் கொள்ள மாட்டார்கள். சூரியன் எப்படி... தினமும் அதிகாலையில் உதித்து, மாலையில் மறைந்து தன்னுடைய பணியை சரியாகச் செய்கிறதோ? அதே போல் எந்த வித பிரதிபலனும் பாராமல், தனக்கு சிவபெருமான் இட்டக் கட்டளையின்படி, தன்னுடைய பணியை நீதிநிலை தவறாமல் வழங்கி வருபவர்தான் சனி பகவான்.

சூரிய பகவானின் மனைவி சுவர்ச்சலா. இவருக்கு மனு, எமதர்மன், யமுனை என மூன்று பிள்ளைகள். நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக சுவர்ச்சலா, தன்னுடைய சக்தியை இழந்திருந்தாள். அவள் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினாள். அதை சூரியனிடம் சொன்னால், அவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில், தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தாள். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள்.

இதையடுத்து சுவர்ச்சலா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனிடம் இருந்து வந்தாள். அவளுக்கு கிருதவர்மா என்ற மகனும், தபதி என்ற மகளும் பிறந்தனர். இதில் கிருதவர்மா என்பவரே பின்னாளில் சனீஸ்வரன் என்று பெயர் பெற்றார். பிறந்தது முதலே சிவபெருமானிடம் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார் கிருதவர்மா. ஒருமுறை தன் தாயிடம், ‘ஈசனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்க, சாயாதேவியோ, ‘தவம் செய்ய வேண்டும்’ என்றாள்.

அதன்படி சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார் கிருதவர்மா. அவரது பக்தியில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு சனி பகவான் என்ற பெயரை அளித்தது மட்டுமின்றி, நவக்கிரகங்களில் ஒருவராக இருந்து, தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கிவரும்படி பணித்தார். அப்படி ஈசன் இட்ட கட்டளையையே இன்றளவும், நீதிநெறி தவறாது கடைப்பிடித்து வருகிறார் சனீஸ்வரர்.

ஒரு ராசியில் 2½ ஆண்டுகள் தங்கியிருக்கும் சனி பகவான், அடுத்த ராசிக்கு செல்வதையே சனிப்பெயர்ச்சி என்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ராசியிலும் இருந்து, ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கி வருகிறார். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனி பகவானை வணங்கி வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் சனியால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். சனி பகவானை வழிபடுவதால் நலன்கள் விளையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இருப்பினும், உங்களது பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ற பலன்களை, சனி பகவான் வழங்கியேத் தீருவார். வழிபாட்டால் நற்பலன்களை அதிகம் பெறலாம். அதே நேரத்தில் கெடு பலன்களாக இருந்தால் அதன் தீவிரம் சற்று குறையுமே தவிர, முழுவதுமாக நீங்காது. ஏனெனில் செய்த தவறுக்கும், பாவங்களுக்குமான பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் நியதி. அதை சரிவரச் செய்வதால்தான், சனீஸ்வரரை ‘தலைமை நீதிபதி’ என்று சொல்கிறார்கள்.

ஒரு உண்மையை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நன்மையைச் செய்பவர்களுக்கும், நல்லதை நினைப்பவர்களுக்கும், நல்லதையே வழங்குவார் சனீஸ்வர பகவான். அவர் தவறு செய்பவர்களை தண்டிக்கும் தெய்வம் அல்ல.. தவறு செய்பவர்களை தடுத்து, திருத்தும் தெய்வம் என்பதை உணர்வோம். அந்த உணர்வோடு இந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவானை விளக்கேற்றி வழிபட்டு, தீய எண்ணங்களை மனதில் இருந்து அகற்றி, நல்ல செயல்கள் பலவற்றையும் செய்ய உறுதிகொள்வோம்.


ஈஸ்வர பட்டம்

நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம், சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு வழங்கினார்.

ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப, பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால் அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில் இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால் மனம் சோர்ந்து போனார் சனி பகவான். ‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு, தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.

நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.

உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும், முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம் வழியாக கயிலாயத்திற்கு வா. பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.

சனி பகவானும் ஈசன் சொன்ன படியே, குறிப்பிட்ட நேரத்தில் தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார். தேவ லோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது, அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான் யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி தலைதெறிக்க ஓடினர். ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர். அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய நினைத்தனர்.

கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார். ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார். பின்னர் விடுவித்தார்.

அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’ என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.

அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.


சனி பகவான் காயத்ரி!

‘காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தப் ப்ரசோதயாத்’
கிரக ஸ்துதி!
‘நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்யாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸ்னைச் சரம்’


இவற்றைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் சனிபகவானின் நல்லருளைப் பெற இயலும்.


சனியின் சன்னிதியில்..

கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேரில் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும்.

எனவே தான் ‘சனியை சாய்வாய் நின்று வழிபடு’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார்.

எந்த மோதிரம்..

ஜாதகத்தில்.. சனி யோககாரகனாக அமைந்தவர்கள், ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்கள், பாக்யாதிபதியாக சனி இருந்து உச்சம் பெற்றவர்கள், எட்டு எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் காக மோதிரம் அணியலாம். சர்ப்பக் கிரகம் பலம் பெற்றிருந்தால் நாக மோதிரம் அணியலாம். சனியின் ஆதிக்கம் பெற்றவர்கள், நீலக்கல் மோதிரம் அணிவது சிறப்பு தரும்.

முறைப்படி பாக்யாதிபதி பலம் பார்த்து, ரத்தினங்களை நாம் பிறந்த தேதி, உடல் எண், உயிர் எண், நட்சத்திரம், ராசி, திசாபுத்தி அனைத்தும் பார்த்து ஆராய்ந்து மோதிரம் அணிவதே மிகுந்த நன்மை தரும்.

ராசியும் ஸ்தானமும்


இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஒவ்வொரு ராசியில் அமரும் ஸ்தானத்தைப் பார்க்கலாம்.

மேஷம் - பிதுர் ராஜ்ய ஸ்தானம், பாக்ய ஸ்தானம்.

ரிஷபம் - அஷ்டம ஸ்தானம்

மிதுனம் - கண்டக ஸ்தானம், களத்திர ஸ்தானம்

கடகம் - எதிர்ப்பு, வியாதி, கடன் ஸ்தானம்

சிம்மம் - புத்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம்

கன்னி - அர்த்தாஷ்டம ஸ்தானம்

துலாம் - சகோதர ஸ்தானம்

விருச்சிகம் - தன ஸ்தானம் (ஏழரையில் குடும்பச் சனி)

தனுசு - ஏழரைச் சனியில் ஜென்மச் சனி

மகரம் - ஏழரைச் சனி தொடக்கம் (விரயச் சனி)

கும்பம் - லாப ஸ்தானம்

மீனம் - ஜீவன ஸ்தானம்


மகத்தான அபிஷேகம்

சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்னர் சனி பகவானின் கவசத்தை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனிபகவான் வழங்குவார்.

Next Story