நல்ல அணுக்களை வாழ செய்யும் சித்தர்கள்


நல்ல அணுக்களை வாழ செய்யும் சித்தர்கள்
x
தினத்தந்தி 7 Feb 2018 7:19 AM GMT (Updated: 7 Feb 2018 7:19 AM GMT)

மக்கள் கலியுகத்தில் இயந்திர வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட அவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய இடங்களாக ஆலயங்கள் திகழ்கின்றன.

ன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் புனித தன்மையை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் எங்கே இருக் கிறார்? என சன்னிதிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பூட்டி கிடந்த ஆலயங்கள் எல்லாம் திறக்கப்படுகிறது. திருப்பணி நடக்கிறது. கும்பாபிேஷகம் கண்டு புத்துயிர் பெறுகிறது. காரணம் மக்கள் கலியுகத்தில் இயந்திர வாழ்க்கை வாழ்ந்தாலும் கூட அவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய இடங்களாக ஆலயங்கள் திகழ்கின்றன.

கடவுளார்கள் என வர்ணிக்கப்பட்டவர்கள் வாழும் ஆலயங்களில் சித்தர் ஒருவர் அடங்கினால் போதும், அந்த ஆலயம் மேலும் பல சிறப்புகள் பெறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ஆலயங்கள் ஏராளமாக உள்ளன.

அகத்தியர் அனந்த சயனத்திலும் (கேரளா பத்பநாதபுரம்), அகப்பேய் சித்தர் எட்டக்குடியிலும், திருமூலர் சிதம்பரத்திலும், நந்தீசர் திருவாவடுதுறை ஆதினத்திலும், போகர் பழனியிலும், ராமதேவர் அழகர்மலையிலும், இடைக்காடர் திருவண்ணா மலையிலும், சட்டமுனி சீர்காழியிலும், கமலமுனி திருவாரூரிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், கொங்கணவர் திருப் பதியிலும், பதஞ்சலி ராமேஸ்வரத்திலும், பாம்பாட்டிச்சித்தர் திருக்கடவூரிலும், சுந்தரானந்தர் மதுரையிலும், குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையிலும், கரூவூரார் தஞ்சாவூரிலும், கோரக்கர் திருக்கழுக்குன்றத்திலும், தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவிலிலும் அடக்கமாகியுள்ளனர். எனவே தான் அந்த தலங்கள் எல்லாம் சிறப்புபெற்றவையாகிறது. பிரமாண்டமான தலமாகி பக்தர்களின் பிரச்சினையை போக்க கூடிய இடமாக விளங்குகிறது.

சித்தர்களில் முதன்மை பெற்றவர்கள் 18 பேர். அவர்களை பலர் பலவிதமாக பட்டியலிட்டு உள்ளார்கள்.

சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து.

சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பை தங்கமாக்கும் வித்தையை கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் என புகழப்படுகிறார்கள்.

சித்தர்கள் தம் சித்தத்தை கொண்டு மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கையும் சிவமாக ஆக்கிகொண்டவர்கள். சாதாரணமாகக் கோவில்களில் யந்திரங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மேல் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள். அதன் சக்தி குறைந்தால் மீண்டும் ஆகம நெறிப்படி குடமுழுக்குச் செய்வர். ஆனால் சித்தர்கள் அடக்கமாயிருக்கும் கோவில்களுக்கு குட முழுக்குத் தேவையில்லை. ஜீவன் முக்தர்களின் உயிர்சக்தியின் இயக்கம் எப்போதும் அலை இயக்கமாக அங்கே பரவி நிற்கிறது.

அதை பல சன்னிதிகளுக்கு செல்லும் போதே நம்மால் உணர முடியும். நமது உடலில் ஒருவிதமான அதிர்வு ஏற்படும். மனது நிம்மதி அடையும். எனவேதான் அவர்கள் அடங்கிய இடங்களை நோக்கி ஓடுகிறோம். மனைத தியானப்படுத்துகிறோம்.

இவர்கள் உலகத்தவரின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சத்தியத்தோடு சமாதி பெற்றவர்கள். அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள்.

இவர்கள் வினை காரணமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. உலகை உய்விக்க வந்து தோன்றியவர்கள். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும் அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சித்தன் சிறிது நேரம் சமாதி நிலையிலோ அல்லது தியான நிலையிலோ இருந்தால் அவன் பல ஆண்டுகள் உலகில் நல்ல அணுக்கள் வாழும் படி செய்து விடுவான். பெரும்பாலான சித்தர்களுக்கு ஆண்டவன் ேஜாதி வடிவில் காட்சித் தருவான். சித்தர்களும் தம் பக்தர்களுக்கு ஜோதி வடிவிலேயே காட்சி தருவார்கள்.

கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது.

மந்திரம் தந்திரம் யந்திரம் இவற்றால் ஆன்ம லாபம் பெறுவதற்கு வழிகாட்டியவர்கள் சித்தர்கள்தான்.

இதில் முதன்மை பெற்ற சித்தர்களை பற்றி பல நூல்களும் தொடர்களும் வந்துள்ளன. ஆனால் நமது தலைமுறையில் வாழ்ந்தவர்களில் பலர் ஜீவசமாதி அடைந்துள்ளனர். அவர்கள் இந்த உலகம் உய்விக்க காரணமாய் இருந்துள்ளனர். தனது தவ வலிமையால் தென்காசி அருகே இலஞ்சியில் மழை பெய்ய வைத்த பேப்பர் சுவாமிகள் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் அடக்கமானவர். தனது உடலை ஏழு துண்டாக பிரித்து தவம் செய்யும் நவயோக தவ வலிமையை கொண்டவர்கள் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்.

தென் தமிழ்நாட்டில் இவர்களை போன்ற சித்தர் பெருமக்கள் பலர் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களின் பெருமை களையும், அவர்கள் அடக்கமாகியிருக்கும் கோவில்களின் சிறப்புகளையும் வரும் வாரங்களில் படிக்க இருக்கிறோம். அதில் முதலாவதாக நாடித்துடிப்புடன் இருக்கும் விநாயகரை பற்றியும், அங்கு ஐக்கியமாகியிருக்கும் மவுன சாமி சித்தரை பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

Next Story