ஆன்மிகம்

நலம் தரும் நம்பிக்கை + "||" + good hope

நலம் தரும் நம்பிக்கை

நலம் தரும் நம்பிக்கை
நம்பிக்கையே நன்மையானவை நிகழ காரணமாக அமைகிறது’ என்று இயேசு எடுத்துரைக்கிறார்.
ண்டவர் இயேசு, குருடர்களுக்கு பார்வை அளித்ததாகவும், செவிடர்களைக் கேட்கச் செய்ததாகவும், நோயாளிகளையும், ஊனமுற்றோரையும் நலமாக்கியதாகவும், இறந்தோரை உயிரோடு எழுப்பியதாகவும் பைபிள் கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவின் செயல்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடம் இருந்து கேட்டவர்கள் தந்த சான்றின் அடிப்படையில் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

இறைமகன் இயேசுவின் வல்லமையே இந்த அற்புதங்களுக்கு காரணம் என்று பைபிள் சான்று பகர்கிறது. ஆனால் இயேசுவோ, ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று’ என்று வேறொரு காரணத்தைக் கூறுகிறார்.

அதாவது, ‘இங்கு சென்றால் நலம் கிடைக்கும், இப்படி செய்தால் வெற்றி கிடைக்கும், இவரிடம் போனால் நல்லது நடக்கும் என்று நாம் கொள்ளும் நம்பிக்கையே நன்மையானவை நிகழ காரணமாக அமைகிறது’ என்று இயேசு எடுத்துரைக்கிறார்.

ஒருமுறை இயேசுவைத் தேடி, கானானியப் பெண் ஒருவர் வந்தார். அவர் இயேசுவிடம், ‘ஐயா, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிற என் மகளை குணப்படுத்தும்’ என வேண்டினார்.

இயேசுவோ மறுமொழியாக, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல’ என்று கூறி அவரை சோதித்தார்.

அப்பெண்ணோ, ‘ஆம் ஐயா, ஆனாலும் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என பதிலளித்தார்.

உடனே இயேசு, ‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே நிகழட்டும்’ என்றார். அந்நேரமே அவர் மகளின் பிணி நீங்கியது.

மற்றொரு தடவை, பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், ‘நான் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘மகளே, துணிவோடிரு, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று’ என்றார். உடனே அப்பெண் நலம் அடைந்தார்.

ஒருவருடைய நம்பிக்கை அவரை குணப்படுத்தும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் வழியாக இயேசு நமக்கு கற்றுத் தரு கிறார். ஆகவே, நாம் எதை நம்புகிறோமோ அதுவே நடக்கும்.

நன்மை நிகழும் என்று நினைத்தால் நல்லதும், தீமை நேரும் என்று எண்ணினால் கெட்டதும் நடக்கும் என்பதே இயேசு தரும் போதனை. நமது நம்பிக்கை நமக்கு மட்டுமன்று, மற்றவர்களுக்கும் நலம் கிடைக்க உதவும் என்பதையும் இயேசு நமக்கு சொல்லித் தருகிறார்.

ஒரு நாள் இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால், வீட்டின் மேற்கூரையைப் பிரித்து, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவுக்கு முன்பாக இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ’ என்றார். அவரும் நலமடைந்து, தமது படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார்.

ஆகவே, நமது நம்பிக்கைக்கு நலம் தரும் ஆற்றல் இருக்கிறது என்பதை இயேசுவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு போதனையும், அவரது இறைத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. எவற்றின் மீது நம்பிக்கை வைத்தாலும், நாம் நலம்பெற முடியும்.

ஆனால், நாம் நம்பிக்கை வைப்பவை அனைத்தும் குணம் தரக்கூடியவை அல்ல. எல்லாம் வல்ல ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தால், அது ஒருபோதும் வீண்போகாது. தம்மிடம் நம்பிக்கை வைக்காதவர்களின் வாழ்வில் அற்புதம் செய்ய அவர் விரும்புவதில்லை.

ஒருவர் இயேசுவை அணுகி அவர்முன் முழந்தாள் படியிட்டு, ‘ஐயா, என் மகனுக்கு இரங்கும். அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழு கிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை’ என்றார்.

அதற்கு இயேசு, ‘நம்பிக்கையற்ற தலைமுறையினரே, நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்’ என்று கூறினார். இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.

இயேசு பேயைக் கடிந்து கொண்டார் என்பது ஒரு மனோதத்துவ ஆற்றுப்படுத்தும் முறையாக உள்ளது. சிறுவனது தந்தையின் நம்பிக்கையால், அவன் வலிப்பு நோயில் இருந்து குணம் பெற்றான். இயேசு கிறிஸ்து செய்த அற்புதத்தை அவரது சீடர் களால் செய்ய முடியவில்லை. ஏனெனில், அப்பொழுது சீடர் களிடம் போதிய அளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் சாதிக்க முடியாது என்ற மற்றொரு பாடத்தை இயேசு நமக்கு சொல்லித் தரு கிறார்.

‘நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்’ என்று இயேசு சீடர்களுக்கு கற்பித்தார்.

இயேசுவின் உயிர்ப்பு வழியாக சீடர்கள் பெற்ற நம்பிக்கையே, பின்னர் அவர்கள் பல்வேறு அற்புதங்களைச் செய்யக் காரணமாக அமைந்தது. ‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்’ என இயேசு நமக்கும் கற்றுத் தருகிறார். சிறப்பாக, ஆண்டவர் இயேசுவில் முழு நம்பிக்கை கொண்டால், நம் வாழ்வில் அற்புதங்களைக் காண்பது உறுதி.

- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.