உடல் பாதிப்பைச் சொல்லும் சந்திரன்


உடல் பாதிப்பைச் சொல்லும் சந்திரன்
x
தினத்தந்தி 9 March 2018 6:02 AM GMT (Updated: 9 March 2018 6:02 AM GMT)

சந்திரன் நிலையைக் கொண்டு தான் ஒருவரது உடல் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

வக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படும் சந்திரனை, ஜோதிட சாஸ்திரத்தில் உடல்காரகன் என்று கூறுவார்கள். இந்தியாவில் பல பகுதிகளில் சந்திரன் நின்ற ராசியையே, லக்னமாக கருதி பலன் சொல்வார்கள். நவக்கிரகங்களில் சந்திரனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகிறது. இதில் சந்திரன் மட்டும் சூரியனை சுற்றாமல், பூமியை சுற்றி வருகிறது. அவ்வாறு பூமியை சுற்றும் சந்திரன், தினமும் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் 15 திதிகளில் பயணப்பட்டுச் செல்கிறது.

அமாவாசை தொடங்கி பிரதமை (15 நாட்கள்), அடுத்த பவுர்ணமி தொடங்கி பிரதமை (15 நாட்கள்) என ஒரு மாதம் கணக்கில் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. ஒரு மனிதனை அவரது உடல்தான் அடையாளப்படுத்தும். அதுபோல தான் ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நிலையைக் கொண்டே அவரது முகம், உடல், அழகு, குணம், வசீகரம் பற்றி பார்க்கப்படுகிறது.

ஒரு மனிதனிடம் கோடிக்கணக்கில் செல்வம் இருந்தாலும், அவனிடம் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால், அனைத்து செல்வமும் பயன்படாமல் போய்விடும். இதனைத் தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். தங்கத்தில் கட்டில் செய்து, நோயோடு அதில் படுத்துப் புரண்டு அழுதால் அந்த உடலுக்கு என்ன பயன் உள்ளது.

ஜோதிடத்தில் சந்திரனுக்கு இரண்டு வகையான குணம் உள்ளது என்பார்கள். சந்திரன் வளர்வதும், பின் சந்திரன் தேய்வதும் என்கிற நிலைபாட்டில் இருக்கிறது. அமாவாசை முதல் சதுர்த்தசி திதி வரை சந்திரன் வளர்பிறையாக வலம் வருவதால், இதனை ‘சுக்ல பட்சம்’ என்கிறார்கள். அதேபோல் பவுர்ணமி முதல் சதுர்த்தசி திதி வரை தேய்பிறையாக சந்திரன் இருப்பதால், இதனை ‘கிருஷ்ண பட்சம்’ என்று கூறுகிறார்கள்.

பொதுவாக ஒரு ஜாதகர் சுக்ல பட்சத்தில் பிறந்து இருந்தால், அவரது குணம் சற்று உயர்வாக காணப்படும். இவர்களது உடலில் கவர்ச்சியான பொலிவு நிறைந்து, போஷாக்கான உடல்வாகு பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் நோய்கள் வராது. மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

அதே நேரம் கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறையில் பிறந்தவர்கள் வித்தியாசமான குணம் பெற்றவர்களாக திகழ்வர். மனச் சோர்வு, முடியாத வேலையை முயற்சி செய்து உடலை வருத்துவது, உடலைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி இருப்பது, கெட்ட பழக்கத்தால் வரக்கூடிய நோய்கள், பரம்பரை நோய்கள் என்று வந்து கொண்டே இருக்கும். தோற்றப் பொலிவு அவ்வளவாக இருக்காது. பெரும்பாலும் இவர்கள் மனக் கவலையில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

சந்திரன் நிலையைக் கொண்டு தான் ஒருவரது உடல் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள முடியும். நாம் யார் என்று நம்முடைய புத்திக்கும் மனதிற்கும் தெரியும். ஆனால் உள்ளிருக்கும் உறுப்புகளுக்குத் தெரியாது. சந்திரன் நிலையை கொண்டே ஒருவரது குணம், மனம், ஆரோக்கியம் பற்றி கூறுகிறோம். ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் சந்திரன் மட்டுமே எந்த ராசியிலும் பகை நிலையை அடைவதில்லை. ஆட்சி, உச்சம், நட்பு, சமம், நீச்சம் ஆகிய நிலையை மட்டுமே அடைகிறது. சந்திரன் விருச்சிக ராசியில் மட்டுமே நீச்சம் அடைகிறது. இதனால் மற்ற ராசிகளை விட விருச்சிக ராசிக்காரர்கள் சற்று வித்தியாசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

Next Story