காஞ்சீபுரத்தில் ஜெயேந்திரருக்கு ஆராதனை


காஞ்சீபுரத்தில் ஜெயேந்திரருக்கு ஆராதனை
x
தினத்தந்தி 13 March 2018 11:00 PM GMT (Updated: 13 March 2018 8:24 PM GMT)

காஞ்சி சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் காஞ்சி சங்கரமடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம்,

இந்த நிலையில் சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக பொறுப்பேற்ற விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரர் ஆராதனை அனுசரிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். மேலும் காஞ்சி சங்கரமடத்தின் கிளை மற்றும் அதை சேர்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் ஆராதனை சிறப்பாக அனுசரிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி நேற்று ஜெயேந்திரர் ஆராதனை காஞ்சி சங்கரமடத்தில் அனுசரிக்கப்பட்டது. காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தார்.

அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓத ஜெயேந்திரரின் தம்பி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் கலச செம்புகளை சுமந்துகொண்டு அவரது அனுஷ்டானத்தை வலம் வந்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், பல்வேறு மடத்தின் மடாதிபதிகளும் இந்த ஆராதனையில் கலந்துகொண்டனர்.

இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, விசுவ இந்து பரிஷத் அகில இந்திய முன்னாள் துணைத்தலைவர் வேதாந்தம், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காலை முதல் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. காஞ்சீபுரம் ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில், வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story