திருப்பேரூர் திருத்தல மகிமைகள்
திருப்பேரூரில் நடைபெற்ற பல அற்புதங்கள், பேரூர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தெய்வானை திருமணம்
முன்னொரு காலத்தில் முருகக்கடவுளை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, இமயமலைச் சாரலில் கடும் தவம் இருந்தார்.
அங்கு வந்த நாரதர், ‘திருப்பேரூர் சென்று தவம் இரு. உனது விருப்பம் நிறைவேறும்’ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து திருப் பேரூர் வந்து முருகக்கடவுளை நினைத்து மனம் உருகி கடும் தவத்தில் ஆழ்ந்தார் தெய்வானை. அங்கு முருகப்பெருமான் தோன்றி, தெய்வானைக்கு காட்சி கொடுத்தார்.
இதைக் கண்ட சிவபெருமான், இந்திரனை அழைத்து முருகப்பெரு மானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பார்க்கும்படி கூறினார்.
மனம் மகிழ்ந்த இந்திரன், தனது மனைவி இந்திராணி மற்றும் தேவாதி தேவர்களுடன் திருப்பேரூர் புறப்பட்டான்.
பின்னர் வெள்ளை யானை மீது முருகக் கடவுளை எழுந்தருளச் செய்து, வீதி உலாவாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். சிவகணங்கள், முக்கோடி தேவர்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் தங்கள் தேவிகளுடன் எழுந்தருளினார்கள். உமா மகேஸ்வரர் முன்னிலையில் இந்திரன் பசும்பால் வார்க்க, அதை ஏற்றுக்கொண்ட முருகப்பெருமான் தனது சிரசு மீது தெளித்துக்கொண்டார். பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, திருமாங்கல்யத்தை தெய்வானையின் திருக்கழுத்தில் அணிவித்தார். அப்போது கூடி இருந்த அனைவரும் பூமாரி தூவி வாழ்த்தினர். தேவியுடன் முருகப்பெருமான் தனது தாய்-தந்தையின் திருவடியில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். சிவ-பார்வதி திருக்கல்யாணமும், முருகன் -தெய்வானை திருக் கல்யாணமும் திருப்பேரூரில் நடந்ததாக பேரூர் புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
நோய் தீர்த்த தலம்
மலை நாட்டில் சேரர் குலத்தில் குலசேரன் என்ற மன்னன் அரசாட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனது உடலில் தொழு நோய் பற்றி இருந்தது. அந்த நோய் நீங்க பல தேசத்து வைத்தியர்களை அழைத்துப் பார்த்தான். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் அரசாட்சியை மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, சிவதல யாத்திரை மேற்கொண்டான். பல திருத்தலங்களை தரிசித்து விட்டு ராமபிரான் வழிபட்ட ராமேஸ்வரம் வந்து சேர்ந்தான்.
அங்கு சிவபெருமானிடம் மனம் உருகி வழிபட்ட போது, நாரத முனிவர் அருளிய திருப்பேரூரின் பெருமைகளை உணர்ந்து இங்கு வந்து சேர்ந்தான். காஞ்சிநதியில் புனித நீராடி சுவாமியையும், அம்மனையும் தரிசித்து தொழுநோய் நீங்கி, எழில் நிறைந்தவனாக மாறினான். தன் நோய் நீங்கியதை அறிந்த அரசன் அகமகிழ்ந்து பேரூர் பெருமானுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்து, தனது வாழ்வின் இறுதிநாளில் முக்தி நிலை பெற்றான்.
சிவநெறி மறந்ததால் விளைந்த துன்பம்
சோழ நாட்டை திரிலோக சோழராசன் என்னும் அரசன் ஆட்சி புரிந்து வந்தான். மூவுலகிற்கும் நன்மை புரியும் வண்ணம் ஆட்சி செய்ததால், திரிலோக சோழராசன் என்னும் பெயர் பெற்றான். இவனது ஆட்சி காலத்தில் அனைவரும் திருநீறு அணிந்து சைவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். ஒருமுறை நேபாள நாட்டில் இருந்து பிற மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் திருவிடைமருதூர் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்த அரசனை அவர்கள் சந்தித்தனர். அரசனும் அவர்களை மரியாதை நிமித்தமாக வணங்கினான். உடனே அவர்கள் அரசனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்து, அரசனை தனியே அழைத்து, ‘உமக்கு உபதேசிக்கவே யாம் வந்தோம்! கடவுளை யாரும் பார்க்கவில்லை. கண்ணால் காண்பதே மெய். காணாதது பொய். எனவே இந்த உலகில் உயிர்கள் படைக்கப்படுவது ஆண்-பெண் இருவரும் இணைவதே. இதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினர்.
இதைத் தொடர்ந்து அந்த அரசன் சிவநெறியை மறந்து, தீய சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்தினான். மன்னன் எப்படியோ, அந்த நாட்டு மக்களும் அவ்வழியே பின்பற்றத் தொடங்கினர். இதனால் நாட்டில் ஒழுக்கம் சீர்குலைந்து போனது.
இதை அறிந்த பிரம்மதேவர் மிகவும் வருந்தி, நாரதரை அழைத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நாரதர், தனது திருக் கமண்டலத்தில் இருந்து புனிதநீரை எடுத்து அரசன் மீது தெளித்தார். அவனது தீய எண்ணங்கள் அழிந்து தெளிவுபெற்றான். தீய உபதேசம் பெற்றவர்கள் அங்கிருந்து அகன்றார்கள்.
பின்னர் நாரதர், அரசனை அழைத்து உமது பாவங்கள் நீங்க பேரூர் பெருமானை வழிபடுவாயாக என்று கூறிச் சென்றார். அதை தொடர்ந்து திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடி சுவாமியையும், அம்மனையும் வணங்கி திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பி மீண்டும் சைவ மதத்தை தழைத்தோங்கச் செய்தான்.
கைகளை துண்டித்த சிற்பி
அகிலத்தையும் ரட்சிக்கும் சிவ பெருமான் இந்த பேரூர் திருத்தலத்தில் ஆனந்த நடனமாடினார். இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தில் கனகசபையை திருமலை நாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கர் 1625-ம் ஆண்டு முதல் 1659-ம் ஆண்டு வரை பார்த்துப் பார்த்துக் கட்டினார்.
கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளை தாண்டினால் இருபக்கமும் 8 சிலைகள், கல் சங்கிலி, சுழல் தாமரை போன்ற அற்புதங்களையும், 2-வது பஞ்சாட்சர படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை உள்ளது.
அதற்கடுத்து உள்ள குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படுகிறது. இந்த சிற்பம் உடைந்ததற்கு ஒரு கதையே சொல்லப்படுகிறது.
இங்குள்ள கனகசபையில் மருதமலையில் இருந்து கொண்டு வந்த கற்களை வைத்து சிற்பங்களை செய்தவர் கம்பனாச்சாரி. 28 ஆண்டுகளாக தனது கற்பனை நயத்தை கல்லில் வடித்தார். கனகசபையில் 36 தத்துவங்களை எடுத்துரைக்கும் விதமாக 36 தூண்கள் உள்ளன.
சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்த பின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மன்னரும், சிற்பி கம்பனாச்சாரியாரும், பொதுமக்களுடன் கோவிலுக்குள் வந்து சிலைகளை பார்வையிட்டனர். சிற்ப சாஸ்திர வல்லுநர்கள் சிலையின் வடிவமைப்பை பார்த்து புகழ்ந்தனர்.
கம்பனாச்சாரியார் தனது 28 ஆண்டு கால உழைப்பை மன்னரும், சிற்ப சாஸ்திர வல்லுநர்களும், பொதுமக்களும் புகழ்வதை பார்த்து தனக்குள் ஒரு கர்வம் கொண்டார். ஒருவனுக்குள் கர்வம் வரும்போெதல்லாம் அதை அடக்க இறைவன் ஏதாவது ஒரு விளையாட்டை நடத்துவார்.
சிற்பி கர்வம் கொண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞன், ‘சிற்பி செய்த ஒரு சிலையில் பிழை இருக்கிறது' என்றான்.
இதை கேட்டதும் சிற்பி கம்பனாச்சாரியார், ‘என்ன பிழை கண்டீர்கள்?' என்று கோபத்துடன் கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், ‘நடராஜர் சன்னிதியின் இடதுபுறம் உள்ள குதிரை வீரன் சிலைக்குள் தேரை இருக்கிறது' என்றான்.
‘அது எப்படிப்பா... தேரை இருக்கும் கல்லில் எப்படி சிற்பம் வடிக்க முடியும்?. நான் செய்த குறையை நீ நிரூபித்து காட்டு’ என்றார்.
உடனே அந்த இளைஞன் இடதுபுறம் உள்ள குதிரை சிலை முழுவதிலும் சந்தனத்தைப் பூசுங்கள்’ என்றான். அதன்படியே கம்பனாச்சாரியாரின் உதவியாளர்கள் அந்த சிலை முழுவதும் சந்தனத்தைப் பூசினார்கள். சிலையின் ஒரு இடத்தில் மட்டுமே ஈரமாக இருந்தது. அந்த இடத்தை உடைக்குமாறு இளைஞன் கூறினான். உடைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்து ஒரு தேரை வெளியே ஓடியது.
சிற்ப சாஸ்திரம் படித்த தனக்கு தெரியாத இந்த குறை ஒரு இளைஞனால் கண்டறியப்பட்டு விட்டதே என்று கம்பனாச்சாரியார் மன்னரின் பாதுகாப்புக்கு வந்திருந்த வீரனின் வாளை பறித்து மேலே வீசினார். பின்னர் தனது இரு கைகளையும் நீட்டினார். மேலிருந்து வந்த வாள் அவரது இரு கைகளையும் துண்டித்தது.
இதை பார்த்து மன்னரும் கூடியிருந்தவர்களும் பதறிப்போனார்கள். மன்னர், ‘சிறிய குறைக்கு இவ்வளவு பெரிய தண்டனை அளித்துக் கொண்டீரே’ என்றார்.
அதற்கு சிற்பி, ‘மாமன்னரே! சிற்ப சாஸ்திரம் படித்த என்னாலேயே கல்லுக்குள் தேரை இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. அந்த இளைஞன் அதைக் கண்டுபிடித்து விட்டான். ஆகையால் அந்த இளைஞனை வைத்தே உடைந்த சிலையை போன்ற வேறு ஒரு சிலையை செய்து நடராஜர் சன்னிதி இடதுபுறம் வைத்து விடுங்கள். நான் செய்த இந்த பிழையை மன்னித்து விடுங்கள்’ என்றார்.
அதற்கு மன்னர், கம்பனாச்சாரியாரே! உங்களது சிற்ப திறமை சரித்திரம் வாய்ந்தது. நாளைய வருங்கால சந்ததிகள் உமது பெயரைச் சொல்லும். உடைந்த சிற்பம் அப்படியே இருக்கட்டும். அப்போது தான் சிற்பி கம்பனாச்சாரியார் தனது சிறு தவறுக்காக தன்னுடைய கைகளை துண்டித்துக் கொண்டார் என்பது தெரிய வரும்’ என்றார்.
அதே வேளையில் தான் அவசரப்பட்டு சொன்ன ஒரு விஷயத்தால், சிற்பியின் கை போனதை நினைத்து அந்த இளைஞன் வருந்தினான். சிற்பியிடமும் மன்னிப்பு கோரினான். அவன் யார் என்று விசாரித்ததில், 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிற்பியின் மகன் தான் அந்த இளைஞன் என்பது தெரியவந்தது. தன்னுடைய சிற்பக் கலையைக் காப்பாற்ற தன் மகன் இருக்கிறான் என்ற பெருமிதம் கொண்டார், அந்த மாபெரும் சிற்பி.
இன்றும்.. நடராஜர் சன்னிதியின் இடதுபுறம் உள்ள சிலை உடைப்பட்டு இருப்பதை கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பார்க்கலாம்.
Related Tags :
Next Story