ஆறாம் இடத்தால் உண்டாகும் பலன்கள்


ஆறாம் இடத்தால் உண்டாகும் பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2018 10:00 PM GMT (Updated: 26 July 2018 10:02 AM GMT)

ஜோதிடத்தில் மனித உடலுக்கு சந்திரனே காரணமாக உள்ளார். அந்த உடலில் தோன்றக்கூடிய அனைத்து வகையான நோய்களையும் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் இருக்கிறது.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்கள் என்று பட்டியலிட்டால் கணக்கில் அடங்காது. தகுதிக்கு மீறி ஆசைப்படுவது கூட ஒரு வகை நோய் தான். காரண காரியமின்றி எதையாவது பேசுவதும் ஒருவகை நோய்தான். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல் தொட்டதற்கு எல்லாம் பயந்து கொண்டு இருப்பதும் ஒருவகை நோய்தான். தங்க கட்டிலில் படுத்தும் கூட நிம்மதியான தூக்கம் வரவில்லையென்றாலும் அதுவும் ஒருவகையில் நோய்தான். இப்படி நோய்களின் பட்டியல் நீளமானது.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்துமே ஜாதகத்தில் உள்ள விதியின் கட்டங்களின்படியே வந்து சேருகிறது. பரம்பரையாக வரக்கூடிய நோய்கள், தானே தேடிக்கொள்ளும் நோய்கள், சுற்றுப்புறச் சூழல் காரணமாக வரக்கூடிய நோய்கள், மற்றவர்களால் வரும் தொற்று நோய்கள், பருவ கால மாற்றங்களால் ஏற்படும் நோய்கள், விபத்துகள் மூலம் வரக்கூடிய நோய்கள், உணவுகள் மூலம் வரக் கூடிய நோய்கள், தொடர் பணியால் வரக்கூடிய நோய்கள், பிறப்பின் போதே இருக்கும் நோய்கள், தவறான மருந்துகளை உட்கொள் வதால் உண்டாகும் நோய்கள். இந்த 10 வழிகளைத் தவிர ஒருவருக்கு நோய் வர வாய்ப்பில்லை.

ஜாதகத்தில் ஆறாம் இடம் என்னும் நோய்களை குறிப்பிடும் அமைப்பைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் பாவம் சுத்தமாக இருந்தால், அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சின்னச் சின்ன காய்ச்சல், ஜலதோஷம், வாயு தொல்லை தவிர பெரிய அளவில் நோய்கள் தாக்காது.

ஆறாம் பாவத்தில் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம் அல்லது நீச்சம் பெற்று இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் நோய்கள் தாக்கும். ஆறில் சுப கிரகம் சூரியன், சந்திரன், குரு, புதன், சுக்ரன், இருந்தால் அந்த ஜாதகர் அதிர்ஷ்டசாலி. இவற்றுக்கு மாறாக செவ்வாய், சனி, ராகு, கேது இருந்தால் உடலில் கெட்ட நீர், கெட்ட ரத்தம் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. எந்த நேரமும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

ஆறாம் இடத்துக்கான அதிபதி வலுக்கக்கூடாது. 6-ம் இடத்தின் அதிபதி 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதும், நீச்சம் பெற்று இருப்பதும் ஜாதகருக்கு நன்மையே செய்யும். திடீர் ராஜயோகம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் கை கூடும். ஆறாம் பாவாதிபதி தசை நடக்கக் கூடாது.

பலன்கள்

ஆறுக்குடையவன் பிறந்த குழந்தையின் தொடக்க தசையாக இருக்ககூடாது. அவ்வாறு இருப்பின் வாழ்க்கை போராட்டமாக அமையும். அதிர்ஷ்டம் என்பது இல்லாமல் போய்விடும். ஆறுக்குஉடையவன் தசைகளில் உடல் உபாதைகள் எந்த ரூபத்தில் வரும் என்றே கூறமுடியாது.

அதே போல் ஆறாம் பாவத்தில் நின்ற கிரகத்தின் தசையும் நடக்கக் கூடாது. அவ்வாறு வந்தால் ஜாதகருக்கு கெட்ட குணம், தொற்று நோய்கள் தாக்கும். சுப கிரகங்களும், அதன் தசைகளும் வேண்டுமானால் நன்மைகளைத் தரலாம்.

ஆறாம் இடத்துக்கு அதிபதியுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது சேர்ந்து இருக்கக்கூடாது. பெரும்பாலும் ஆறுக்குடையவன் தனித்து நிற்பது நல்லது. இதை தவிர வேறு கெட்ட கிரக சேர்க்கை இல்லாமல் இருப்பதும் நல்லது.

ஆறாம் பாவாதிபதி ஆறில் நிற்பதும், 12-ம் இடத்தில் நிற்பதும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மன தைரியம் பாதி நோயை போக்கி விடும்.

கிரகங்கள் தரும் நோய்கள்

 ஆறில் சூரியன் நின்றால், சூரியன் கிரகத்திற்குரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். தலைவலி, நெஞ்சு வலிகள், இதய அடைப்பு, இதய மாற்று அறுவை சிகிச் சை, ஆஞ்சியோ போன்றவை வரக்கூடும். இந்த ஜாதகர் அரசாங்க உத்தியோகம் அல்லது அரசு டெண்டர் மற்றும் அரசு வகையில் குறுக்கு வழியில் சம்பாதிப்பார். சில லட்சங்களுக்கு அதிபதியாக இருப்பார்.

 ஆறாம் பாவத்தில் சந்திரன் நின்றால், சந்திரனுக்கு உரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். இந்த ஜாதகர் மனதளவில் குரூரமாக இருப்பார். சில சமயம் மன தைரியம் குறைந்து காணப்படும். ஜலதோஷம், நுரையீரல் பிரச்சினை, கெட்ட நீர் உடலில் சேர்வதும், உடல், முகம் வாட்டம் காண்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சந்திரன் ஆறில் நிற்பதால், உழைப்பால் உயர்ந்தவர் என்ற பெயர் எடுப்பார்கள்.

 ஆறில் செவ்வாய் நின்றால், செவ்வாய் கிரகத்திற்கு உரிய அனைத்து நோய்களும் வரும். உடல் சூடு, வெப்ப கட்டிகள், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், ரசாயனம், விஷம் மூலம் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும் உறுப்பு களில் பாதிப்பு இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஜாதகர் பெயரில் சொந்த நிலமாவது இருக்கும். புதிய பூமி வாங்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

 ஆறாம் பாவத்தில் புதன் நின்றால், புதனுக்குரி உரிய அனைத்து நோய்களும் வரக்கூடும். மூச்சு திணறல், நரம்பு முடிச்சு போடுவது, நரம்பு வெடிப்புகள், கை கால் முடக்கம் ஆவது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் நரம்புகள் இழுத்து பிடிப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும். இந்த ஜாதகர் தனது அறிவு, பேச்சு சாமர்த்தியத்தால் குறைந்த பட்சம் சில லட்சங்களுக்கு அதிபதியாக இருப்பார்.

 ஆறாம் பாவத்தில் குரு நின்று இருந்தால், உடல் பருமன், உடல் சோர்வு, முகவாய் பிளவு, பற்களில் சிதைவு, கணையம், மண்ணீரல் போன்றவற்றில் பிரச்சினைகள் வரலாம். சிலருக்கு மூளை பாதிப்புகள் வரலாம். சுய நினைவு, ஞாபக மறதி இருக்கும். குரு ஆறில் நின்றவர்கள் கோடீஸ்வரன் என்று தான் கூற வேண்டும். யோக தசைகளில் பல கோடிகள் சம்பாதிப்பார்.

 ஆறாம் பாவத்தில் சுக்ரன் நின்றால், ஜாதகருக்கு பல இன்னல்கள் வரக்கூடும். சர்க்கரை நோய் வரும். கெட்ட கொழுப்பு உடல் உபாதை தரும். கெட்டியாக கபம் கட்டும். காச நோய், சுவாச கோளாறுகள் வரக்கூடும். கண் பிரச்சினை ஏற்படும். இந்த ஜாதகருக்கு நல்ல யோக தசை நடப்பில் இருந்தால், குபேரன் ஆகும் யோகத்தைப் பெறுவார்.

 ஆறாம் பாவத்தில் சனி நின்றால், ஜாதகரை பல வகையான நோய்கள் தாக்கக் கூடும். பித்தம், உடல் கஷ்டம், என்ன நோய் என்றே காண முடியாத மர்ம நோய்கள், தொற்று நோய்கள் உருவாகி, ஆயுள் வரை மருத்துவம் பார்க்கும் நிலையை உருவாக்கும். போதை வஸ்துகள் மற்றும் உண்ணும் உணவுகளில் கூட நோய் தாக்கம் ஏற்படும். இந்த ஜாதகருக்கு நல்ல யோக தசை நடப்பில் இருந்தால், அவர் தப்பிப் பிழைப்பார். இல்லையேல் பலவிதமான தொல்லைகள், உடல் நோய்களால் அவதிப்படுவார்.

 ஆறில் ராகு நின்றால், பலவிதமான உடல் உபாதைகள் தொல்லை தரக்கூடும். வாயு தொல்லையால் கை கால் பிடிப்பு, தசை வலிகள் உண்டாகும். விஷ வண்டுகள், பாம்பு, தேள் போன்றவற்றால் ஆபத்து வரலாம். இந்த ஜாதகருக்கு யோக தசை நடப்பில் இருந்தால் கெடுதல் குறையும். குறுக்கு வழியில் பணம் தேடி வரும். பினாமி ஆகும் வாய்ப்பு உண்டு. தசை கெட்டு இருந்தால் ஜாதகர் படும் வேதனையை அளவிட முடியாது.

 ஆறில் கேது நின்றால், உடலில் தோல் வியாதிகள் வரக்கூடும். உடலில் கெட்ட வாடை அடிக்கும். எந்த நேரமும் ஏதாவது ஒரு உபாதை இருந்து கொண்டே இருக்கும். உடல் சோர்வும், மனசோர்வும் வாட்டி எடுக்கும். இந்த ஜாதகருக்கு யோக தசை நடந்தாலும் கேதுவால் ஒரு பலனும் இல்லை. அதே கெட்ட தசை காலத்தில் ஜாதகரை படாதபாடு படுத்திவிடுவார் கேது.

ஆர்.சூரியநாராயணமூர்த்தி 

Next Story