ஆன்மிகம்

நீலகிரியின் காவல் தெய்வங்கள் + "||" + Goddesses of Nilgiri

நீலகிரியின் காவல் தெய்வங்கள்

நீலகிரியின் காவல் தெய்வங்கள்
நீலகிரி மாவட்டத்தின் காவல் தெய்வங்கள் வாழும் கோவில், ஒரே கருவறைக்குள் மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரு தெய்வங்கள் குடிகொண்டுள்ள ஆலயம்.
உதக மண்டலத்தின் பழம்பெரும் திருக்கோவில், தேர்த் திருவிழாவில் வெள்ளை நிறப் புடவை அணியும் அம்மன், 36 நாட்கள்  பிரம்மோற்சவம் நடக்கும் அபூர்வ ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, ஊட்டி மாரியம்மன் திருக்கோவில்.

தலவரலாறு

இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவங்களாக மாரியம்மன், காளியம்மன், காட்டேரி ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியின மக்கள் நிறைந்து வாழ்ந்த நீலகிரிக்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோயம்புத்தூர் மாவட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்கவும், பழங்குடியின மக்களிடம் கிடைக்கும் அரிய வகைப் பொருட்களை வாங்கவும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பரபரப்பாக வாணிபம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு சகோதரிகள்   வடக்கே இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவருமே ஒளிவீசும் கண்களுடன், தெய்வீக மனம் கமழ, சாந்த சொரூபிகளாகக் காட்சி தந்தனர்.
அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்த மக்களிடம், ‘நாங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா?’ என்று வினவினர்.

அவர்களைக் கண்டதும் அனைவரின் உள்ளத்திலும் இனம்புரியாத பரவசம் ஏற்பட்டது.  வந்திருப்பவர்கள் சாதாரணப் பெண்களல்ல, தெய்வப்பிறவி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியது.

உடனே அவர்கள், அருகில் இருந்த  மரத்தைக் காட்டி, அதனடியில் தங்கிக்கொள்ள அனுமதித்தனர்.  அங்கு சென்ற இரு பெண்களும் ஒரு மின்னல் கீற்றாகத் தோன்றி, மரத்தின் அடியில் மறைந்தனர். அந்த இடத்தை மையமாகக் கொண்டு மாரியம்மன், காளியம்மன் திருவுருவங்களுடன் திருக்கோவிலை எழுப்பி வழிபடத் தொடங்கினர். இதன்பின், காலங்காலமாக செவ்வாய்க்கிழமைகளில் சந்தைகள் நடைபெறுகிறது.  வந்து செல்லும் மக்களும் அம்மன்களை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

திருக்கோவிலின் நடுநாயகமாக விளங்குவது மாரியம்மன், காளியம்மன் எனும் சகோதரிகள். ஒரே கருவறையில் இரண்டு அம்மன்கள் குடிகொண்டுள்ளது, அரிதான நிகழ்வாகும். எதிரில் நந்தியம்பெருமான் அம்மன்களைத் தரிசித்தவாறு அமர்ந்துள்ளார். கருவறை முன்புறம் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர்.

கருவறையில் வீற்றிக்கும், மாரியம்மன், காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களின் உருவங்களும், ஒரே வடிவிலான உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் பிற்காலத்தில் இங்கு குடியேறியவர்கள் ஆகியோருக்கு இந்த இரண்டு அம்மன்களுமே காவல்தெய்வங்களாக விளங்குகின்றனர்.

காட்டேரி அம்மன்

ஆலயத்தின் மூன்றாவது சக்தியாக, காட்டேரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆலயத்தின் வலதுபுறம் மூலையில் காட்டேரி சன்னிதி தனியே அமைந்துள்ளது. இந்த அன்னை தீவினைகளை அகற்றும் அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள்கிறார். அன்னையின் பெயர் ‘காட்டேரி’ என்றாலும், அழகு  ததும்பும் எழிலான கோலத்தில் காட்சி தருவது சிறப்புக்குரியதாகும். இந்த அம்மனிடம் குழந்தைப்பேறு வேண்டுவோர், அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன், ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். மேலும் அம்மனுக்கு கோழிக்குஞ்சும், கருப்பு நிறப் புடவையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த அன்னையிடம் வேண்டினால், தீராத நோய்கள் கூட தீர்ந்து போவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆலய அமைப்பு 

இந்த ஆலம் நீண்டு உயர்ந்த ஏழுநிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், விநாயகர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், தியாகராஜர், வடிவாம்பிகை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள் ஆகிய திருமேனிகள் ஒருங்கே அமைந்திருப்பதை கண்டு தரிசிக்கலாம்.

இந்த தெய்வங்களுக்கெல்லாம் பிரதானமாக, வேண்டிய வரங்களைத் தரும் அன்னையர்களாக கருவறையில் மாரியம்மன், காளியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

இந்த ஆலயத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் நவராத்திரியின் பத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இது தவிர, ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவானது, சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தொடர்ச்சியாக 36 நாட்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விழாவின் போது துர்க்கையாக, காமாட்சியாக, பார்வதியாக, மீனாட்சியாக, ராஜராஜேஸ்வரியாக, புவனேஸ்வரியாக என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் அம்மன் வீதி உலா வருவதைக் காண கண்கோடி வேண்டும்.

அன்னையர்கள் இந்தப் பகுதியில் அடைக்கலமானதைக் குறிக்கும் விதமாக, சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையின் ேதரோட்டம் நடைபெறுகிறது. அப்போது அன்னை வெள்ளை நிறப் புடவை அணிந்து, அலங்காரம் செய்யப்பட்டு உலா வருகிறார். வீதியில் உலா வரும்போது, தேரின் மீது பக்தர்கள் உப்பை வீசி வழிபாடு செய்கின்றனர். உப்பைப் போல தங்களின் குறைகளும், துன்பங்களும் கரைந்து போக வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை பக்தர்கள் செய்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான, ஊட்டி எனப்படும் உதகமண்டலத்தின் மையப் பகுதியான லோயர் பஜார், அப்பர் பஜார் பகுதியில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. சந்தைக் கடைகளுக்கு நடுவில் அமைந்துள்ளதால், ‘சந்தைக்கடை மாரியம்மன் கோவில்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

-பனையபுரம் அதியமான்

நீலகிரியின் பழைய பெயர் ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். ‘மந்து’ என்பது ‘மலை’யைக் குறிக்கும் சொல்லாகும். ஒற்றைக் கல்லில் உருவானது உதகமண்டலமாகும். தமிழ்நாட்டின் அங்கமாகத் திகழும்,  கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகள் பழங்காலத்தில் ‘சீத வளநாடு’ என வழங்கப்பட்டது. ‘குளிர் பிரதேசம்’ என்பது இதன் பொருளாகும். இந்த சீத வளநாட்டிற்கு இரண்டு மலைகள் பிரதானமாக அமைந்துள்ளன. ஒன்று கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி எனும் சிவன் மலை, மற்றொன்று நீலகிரி எனும் சக்தி மலை ஆகும். கந்தபுராணத்திலும் இக்குறிப்பு காணப்படுகிறது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களுடன் போரிட நீலகிரி வழியே சென்றதை, சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் எடுத்துரைக்கிறது.

சக்தி மலை சித்தர்களின் மலையாக விளங்கியதையும் அறிய முடிகிறது. காந்தள் பகுதியில் வசித்த  ஓம்பிரகாஷ் சுவாமிகள், கம்பளிச்சித்தர் உள்ளிட்டோர் இம்மலையில் தவம் செய்திருக்கிறார்கள்.