ஆன்மிகம்

நள்ளிரவில் உணவருந்த வந்த இறைவன் + "||" + Lord came to feed at midnight

நள்ளிரவில் உணவருந்த வந்த இறைவன்

நள்ளிரவில் உணவருந்த வந்த இறைவன்
ஒருவர் என்ன தொழில் செய்தாலும், எத்தனை தொழில் செய்தாலும், இவ்வுலகில் வாழ அவருக்கும் உழவுத் தொழிலின் மூலம் கிடைக்கும் உணவு தான் தேவைப்படுகிறது. இப்படி பிற தொழில் செய்பவர்களையும் தாங்குபவர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் என்றால் அது மிகையாகாது.
8-9-2018 அன்று மாற நாயனார் குருபூஜை

தம் முயற்சியாலும், உழைப்பினாலும் உழவுத்தொழிலின் மூலம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும், நலிந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்தவர் மாறனார் என்னும் சிவனடியார். சிவகங்கை அருகில் உள்ள இளையான்குடியில் வசித்த மாறனார், தனது மனைவி புனிதவதியுடன் இணைந்து இந்த திருத்தொண்டை செய்து வந்தார்.

சிவனடியார்களுக்குத் தினமும் அன்னமிட்டு, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர், இந்த தம்பதியர். இதனால் அவர்களுக்கு உழவுத்தொழிலின் மூலம் மேன்மேலும் செல்வம் பெருகியது. பெருகிய செல்வத்தைக் கொண்டு தம் அடியார் வழிபாட்டையும், அவர்களுக்கு அன்னமிடலையும் தொடர்ந்து செய்து வந்தனர்.

மாறனாரின் சிவதொண்டை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவனடியார், மாறனாரின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும்படி செய்யலானார். மாறனாரின் வீட்டில் இருந்த செல்வம் குறைந்து, தம் விளை நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் சிவதொண்டை செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

ஒருநாள் கடும் மழை. அன்று ஆவணி மாதம் மகம் நட்சத்திர நன்னாள். வறுமையின் கொடுமையால், உண்ண உணவின்றி மாற நாயனாரும், அவரது மனைவி புனிதவதியும் சிவநாமத்தை உச்சரித்தவாறே இருந்தனர். இரவுப் பொழுது வந்தும், அடை மழை நின்றபாடில்லை. மாறனாரும் அவரது மனைவியும் பசியால் மிகவும் துவண்டு தூங்கிப்போயினர்.

நள்ளிரவில் அந்த அடைமழையில் சிவபெருமான், அடியவர் திருக்கோலம்பூண்டு மாற நாயனாரின் வீட்டு வாசல் கதவை தட்டி நின்றார். தம்பதியர் இருவரும் ‘இந்த நள்ளிரவில் யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தில் வாசல் கதவினை திறந்தனர். அங்கு ஒரு சிவனடியார் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

மழையில் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அந்த சிவனடியாரை, வீட்டிற்குள் அழைத்து, தலையை துவட்ட துண்டும், மாற்றுத் துணியும் கொடுத்தனர். பின் அடியவரின் பசியைப் போக்க கணவனும், மனைவியும் ஈசனை துதித்தபடியே இருந்தனர்.

வேறு என்ன செய்வது?. இப்போது வறுமையின் காரணமாக அவர்கள் சாப்பிடவே எதுவும் இல்லாத நிலையில், வந்திருக்கும் அடியவருக்கு எப்படி உணவிட்டு அகமகிழ முடியும்.

அப்போது மாறனாரின் மனைவி ஒரு யோசனைச் சொன்னார். ‘நாம் இன்று காலையில் வயலில் விதைத்து வந்த விளை நெல்லினை சேகரித்து எடுத்து வந்து தந்தால், நான் அடியவருக்கு சமைத்து அன்னம் பரிமாறுவேன்’ என்றாள்.

வந்திருந்த அடியவரை கொஞ்ச நேரம் இருக்கும்படி கூறிவிட்டு, அந்த நள்ளிரவு அடைமழை நேரத்தில் கையில் அரிவாளையும், கூடையையும் எடுத்துக் கொண்டு வயலை நோக்கி விரைந்தார், மாறனார். அதே நேரம் வீட்டின் பின்புறம் இருந்த தண்டு கீரைகளை வேரோடு பிடுங்கி வந்து, அதன் தண்டினை அரிந்து குழம்பாக்கினாள், புனிதவதி. தண்டு கீரையின் இலைகளைக் கொண்டு கூட்டுப்பொறியலும் தயாரானது. இந்த நிலையில் வீட்டில் இருந்த விறகு அனைத்தும் காலியாகிப் போய்விட்டது. இனி அடுப்பெரிக்க சிறு துண்டு விறகு கூட இல்லை என்ற நிலையில், கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி.

இதற்கிடையில் உணவுக்காக காத்திருந்த அடியவர், அப்படியே கண்ணயர்ந்து போனார்.

இருளில் தட்டுத் தடுமாறி வயலை அடைந்த மாறனார், காலையில் விதைத்திருந்த விதை நெல் அனைத்தும், மழை நீரில் மிதந்து வரப்பு ஓரமாக ஒதுங்கியிருப்பதைக் கண்டார். அதனை அப்படியே அள்ளி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். கணவனைக் கண்டதும், ‘வீட்டில் விறகு இல்லை’ என்பதைச் சொன்னார் புனிதவதி.

உடனே மாறனார், வீட்டின் கூரையில் வேயப்பட்டிருந்த குச்சிகளையும், கம்புகளையும் பிய்த்துக் கொடுத்தார்.

இதையடுத்து விதை நெல்லை நன்கு கழுவி, வறுத்து பின்னர் உரலில் இட்டு குத்தி அரிசியாக்கி, பதமாக உலையிலட்டு சோறாக்கினார் புனிதவதி. பின் இருவருமாக சேர்ந்து களைப்பில் உறங்கி விட்ட அடியவரை உணவு கொடுப்பதற்காக எழுப்பினர். அப்போது அடியவர் மறைந்து அங்கு ஜோதிப் பிழம்பு தோன்றியது. அதில் இருந்து ரிஷப வாகனத்தில் ஈசனும், அம்பிகையும் காட்சி அளித்தனர். மாறனாரும், புனிதவதியும் அம்மையப்பனை வணங்கி நின்றனர்.

அப்போது ஈசன், ‘அன்பனே! அடியவர்களை உபசரித்து பசியாற்றும் உன் சிறப்பினை உலகம் அறியச் செய்யவே உனக்கு வறுமை நிலையைத் தந்தோம். அந்த வறுமையிலும் நீயும் உன் மனைவியும் செய்த தொண்டினைக் கண்டு உள்ளம் பூரித்தோம். இனி குபேரனின் சங்கநிதியும், பதுமநிதியும் உங்கள் அருகில் நின்று உங்களுக்கு சேவகம் செய்யும். நீங்கள் இருவரும் இன்னும் பலகாலம் தொண்டு செய்து என்னை வந்து அடைவீர்கள்’ என்று கூறி மறைந்தார்.

மாறனார் அவதாரம் செய்த தலமும், முக்தியடைந்த தலமும் இளையான்குடி திருத்தலமே. இளையான்குடியில் அருளாட்சி செய்யும் ஈசனின் திருநாமம் ‘ராஜேந்திர சோழீஸ்வரர்’ என்பதாகும். அன்னையின் திருப்பெயர் ஞானாம்பாள். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திர நாளில் மிகச்சிறப்பாக மாற நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. மாற நாயனாரின் விவசாய விளைநிலமும் இங்கு ஆலயம் அருகிலேயே உள்ளது. இங்கு ஆவணி மகம் அன்று இத்தல ஈசனுக்கு தண்டுக்கீரை நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறார்கள். திங்கட்கிழமைகளில் அல்லது மகம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து, இத்தல மண்ணெடுத்து ஈசன், அம்பாள், பைரவர், மாற நாயனார் சன்னிதியில் வைத்து வழிபட்டு, அதனை வயல்களில்,தோட்டங்களில் தூவினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிவகங்கையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பரமக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் இளையான்குடி அமைந்துள்ளது.